பெரும்பாலான ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் விஜய்யின் `லியோ’ படம் வரும் அக்டோபர் 19-ம் தேதி வெளியாக இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்திருக்கிறது.
அடுத்தடுத்து அந்த வார இறுதி முழுவதும் விடுமுறை என்பதால் அதைக் கருத்தில்கொண்டு இந்த ரிலீஸ் தேதியை முடிவு செய்திருந்தது தயாரிப்பு நிறுவனம். ஆனால், திரையரங்கில் வெளியாவதற்கு முன்பே இப்படம் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகிறது. நடிகர் விஜய்யின் படங்களுக்கு மிகப்பெரிய புரொமோஷனாக அமைவது அதன் ஆடியோ லாஞ்ச்தான். ஆனால் ஒரு சில காரணங்களால் இந்தப் படத்தின் ஆடியோ லாஞ்ச் நடைபெறவில்லை. அதேபோல் விஜய் போன்ற முன்னணி நடிகரின் படங்களுக்கு அதிகாலை காட்சிகள் திரையிடப்படுவது வழக்கம்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/Thalapathy_Vijay_at_Bigil_Audio_Launch.png)
ஆனால் கடந்த பொங்கல் பண்டிகைக்கு விஜய்யின் ‘வாரிசு’ மற்றும் அஜித்தின் ‘துணிவு’ ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸான போது அதிகாலை சிறப்புக் காட்சியில் ரசிகர்கள் இடையே மோதல், கவனக்குறைவால் உயிரிழப்பு சம்பவங்கள் போன்றவையும் அரங்கேறின. இந்தச் சம்பவத்தை அடுத்து எந்தப் படங்களுக்கும் அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. விடுமுறை நாள் என்றால் மட்டும் 9 மணிக் காட்சிகள் போடப்பட்டு வந்தன. அந்த வகையில் ‘லியோ’ படம் ரிலீஸாகும் தேதி விடுமுறை நாளும் இல்லை என்பதால் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அடுத்தடுத்த நாள்கள் விடுமுறை தினங்கள் என்றாலும் முதல் நாள் சிறப்புக் காட்சி வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.
இந்நிலையில், ‘லியோ’ படத்திற்குச் சிறப்புக் காட்சி வழங்கப்பட வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் சார்பில் அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக முதல் நாள் (19-ம் தேதி), இரண்டு சிறப்புக் காட்சிகளுக்கு (அதிகாலை 4 மணி, 7 மணி என மொத்தம் ஒரு நாளைக்கு 6 காட்சிகள்) அனுமதி வேண்டும் என்றும், அடுத்தடுத்த விடுமுறை நாள்களுக்கு (20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை) ஒரு நாளுக்கு 5 காட்சிகளுக்கு (அதிகாலை 7 மணி மட்டும்) அனுமதி வேண்டும் என்றும் வேண்டுகோள் வைக்கப்பட்டிருந்தது.
இதைப் பரிசீலனை செய்த தமிழக அரசு, ஒரேயொரு சிறப்புக் காட்சிக்கு மட்டும் அனுமதி அளித்திருக்கிறது. அதன்படி ஒரு நாளைக்கு 5 காட்சிகள் என மொத்தம் 6 நாள்களுக்கு அதாவது, 19-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/_Exclusive_Stills_from_Thalapathy_s_Upcoming_Leo_Movie__10__1696590061.jpeg)
விடுமுறை இல்லாத முதல் நாளிலும் 5 காட்சிகளுக்கு அரசு அனுமதி அளித்திருந்தாலும், எப்போது முதல் ஷோ போடவேண்டும் என்பது குறித்த தெளிவான விளக்கம் எதுவும் அந்த உத்தரவில் தரப்படவில்லை. 5 காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி என்பதால், அந்தந்த திரையரங்க நிர்வாகத்தின் விருப்பப்படி முதல் காட்சி என்பது அதிகாலை 7 மணி முதல் காலை 9 மணி வரை எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் என்று தெரிகிறது.