ஆட்சிக்கு வந்ததும் காங்கிரஸ் அளித்த உரிமைகளை பறித்தது பா.ஜ.க.: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

போபால்,

நாட்டில் மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மத்திய பிரதேசத்திற்கு நவம்பர் 17ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணியாற்றி வருகின்றன.

இந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் மண்ட்லா நகரில் நடந்த பொது கூட்டம் ஒன்றில் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசும்போது, ஆளும் பா.ஜ.க. மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை கூறினார். பா.ஜ.க. ஆட்சியில் 1.5 லட்சம் பெண்கள் மற்றும் இளம்பெண்கள் காணாமல் போயுள்ளனர் என்றும் நாட்டில் மத்திய பிரதேசத்திலேயே, அதிக அளவில் காணாமல் போகும் இளம்பெண்களின் எண்ணிக்கை பதிவாகிறது என்றும் கூறினார்.

மத்திய பிரதேசத்தில் தினமும் 17 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடக்கின்றன. பழங்குடியினர் மீது நடத்தப்படும் வன்முறைகளை கவனத்தில் கொள்ளும்போது, நாட்டில் மத்திய பிரதேசமே முன்னிலையில் உள்ளது என்று பேசியுள்ளார்.

தொடர்ந்து அவர், உங்களுக்கு காங்கிரஸ் அளித்த உரிமைகள், உங்களை அதிகாரமிக்கவர்களாக ஆக்க செய்த பணிகள் என அனைத்தும், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் உங்களிடம் இருந்து பறிக்கப்பட்டு உள்ளன.

பஞ்சாயத்து தலைவர்களின் உரிமைகள் குறைக்கப்பட்டு உள்ளன. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் அமல்படுத்தப்படவில்லை.

புலம்பெயர்தல் அதிகரித்து உள்ளது. ஏனெனில் கிராமங்களில் வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகள் இல்லை. உங்களுடைய நிலம் பறிக்கப்படுகின்றன.

உங்களுடைய உற்பத்திக்கு சரியான விலை உங்களுக்கு கொடுப்பதில்லை. நீங்கள் போராடும்போது, துப்பாக்கி குண்டுகள் உங்களை நோக்கி பாய்கின்றன என அவர் பேசியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.