இரங்கல் செய்தி

ஜெக்சன் அன்டனியின் கலைத் தலைமுறையின் முன்னோடியான சரத்சந்திரவின் “மலகிய அத்தோ” நூலில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

“உலகம் இருப்பது வரவும் போகவும் தான். நீங்கள் திரும்பிச் செல்ல முடியாது, போகாமல் வர முடியாது. உலகில் வாழும் நாம் அனைவரும் இந்த உண்மைக்கு உட்பட்டவர்கள். என்றாவது ஒரு நாள் நாம் போக வேண்டும்.”

பன்முகத் திறமை கொண்ட ஜெக்சனுக்கும் நம்மை விட்டும் தூரமாகச் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது. ஆனால் அவர் இவ்வளவு சீக்கிரம் போய்விடுவார் என்று நாங்கள் யாரும் நினைக்கவில்லை.

அவரது மறைவு இலங்கையின் கலைத்துறைக்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பாகவே நான் கருதுகிறேன்.

கடந்த சில நாட்களாக ஜெக்சனின் படைப்புக்களைப் பற்றி பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் தவறவிட்ட ஒரு விடயத்தை நான் வலியுறுத்த விரும்புகிறேன். அதுதான் ஒரு நாவலாசிரியராக அவர் வெளிப்படுத்திய ஆளுமை.

“கந்த உட கிந்தர” (மலையின் மேல் நெருப்பு) ஜெக்சன் எழுதிய முதலாவது நாவல். இதன் இரண்டாம் பாகத்தை எழுத ஜெக்சன் தயாராக இருந்ததை நான் அறிவேன். ஆனால் அதை எழுதி முடிப்பதற்குள் அவர் இறந்துவிட்டார். அதுவும் வருத்தமான விடயமாகும்.

அவருடைய மறைவு தொடர்பில் எனதும் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவினதும் ஆழ்ந்த இரங்கலை அவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இறுதியாக, மற்றொரு விடயத்தைக் குறிப்பிட வேண்டும்.

ஜெக்சனின் வாழ்க்கையில் சில நடைமுறைகள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளான நேரங்கள் இருந்தன.
அதை நினைவு கூறும் அதே வேளை, அவர் பின்பற்றும் மதத்திற்கு அமைய, பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த வாக்கியங்களை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.

“தீர்ப்பளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள். நீங்கள் அளிக்கும் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும்.” (பைபிள் – புதிய ஏற்பாடு)

பன்முகத் திறமை கொண்ட ஜெக்சன் அன்டனியின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

ரணில் விக்ரமசிங்க,
ஜனாதிபதி,
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.