டெல் அவிவ்: இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் தொடங்கி 6 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இந்த மோதலில் இஸ்ரேல் தரப்பில் 1,200 பேரும், காஸாவில் 1,100 பேரும் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மோதல்கள் தீவிரமாகி வரும் நிலையில், முன்னாள் ராணுவ வீரர்கள் உட்பட ரிசர்விஸ்ட் எனப்படும் வீரர்களையும் போரில் பங்கேற்க இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் காரணமாக வெளிநாடுகளில் தங்கியிருந்த முன்னாள் ராணுவ வீரர்கள், விடுமுறை சென்றிருந்தவர்கள் இஸ்ரேல் ராணுவத்துடன் இணைந்து வருகின்றனர்.
இப்போரில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் கலந்துகொண்டுள்ளனர். ராணுவ வீராங்கனைகளாக, மருத்துவர்களாக பெண்களும் முக்கியப் பங்கு வகித்து வருகின்றனர். அப்படியாக பணியில் இருக்கும் பெண் ராணுவ அதிகாரிகளின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) பகிர்ந்துள்ளது.
மோரியா மென்சர்: இஸ்ரேலிய ராணுவத்தின் முன்னாள் வீராங்கனையான இவர் வெளிநாட்டில் தங்கியிருந்தார். சமீபத்திய ஹமாஸ் தாக்குதலில், இவரின் நெருங்கிய நண்பர் கொல்லப்பட, மீண்டும் ராணுவ வீராங்கனையாக பணியாற்ற இஸ்ரேலுக்கு பறந்துவிட்டார். லண்டனில் இருந்து இஸ்ரேலுக்கு கிளம்பிய மோரியா, “எனது நண்பர் இரண்டு நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டதை அறிந்தேன். அவர் மட்டுமல்ல, எங்களது சக நண்பர்கள் மிகவும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையில் இருகின்றனர். இக்கட்டான இந்த சூழலில் அவர்களுக்கு உதவ நான் மீண்டும் இஸ்ரேலுக்கு செல்கிறேன்” என வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது மோரியா இஸ்ரேல் ராணுவத்தில் இணைந்து ஹமாஸுக்கு எதிராக போரிட்டு வருகிறார்.
எல்லா வாவேயா: சமூக ஊடகங்களில் இவர் மிகப் பிரபலம். “கேப்டன் எல்லா” என்று அறியப்படும் இவர் இஸ்ரேல் ராணுவத்தில் மேஜர் ஆன முதல் முஸ்லிம் அரபு பெண். பணியில் இருந்து ஓய்வுபெற்ற எல்லா, தற்போது நேரடியாக போரில் பங்கேற்காவிட்டாலும் போர் தொடர்பான உதவிகள், சேவைகள் மற்றும் தேவைகளை இஸ்ரேல் ராணுவத்தின் வலைதள பக்கங்கள் மூலம் பகிர்ந்து வருகிறார்.
ஜோஹர் மற்றும் லிரோன்: தம்பதிகளான இவர்களும் இஸ்ரேல் ராணுவத்தின் முன்னாள் வீரர்கள். இஸ்ரேல் மீது ஹமாஸ் எதிர்பாராத தாக்குதலை தொடங்கிய முதல் நாளில் தெற்கு இஸ்ரேலில் சூப்பர்நோவா இசை விழாவில் இவர்கள் இருவரும் பங்கேற்றிருந்தனர். அப்போது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிர் தப்பிய இருவரும் மீண்டும் இஸ்ரேல் ராணுவத்தில் பணியாற்ற இணைந்துள்ளனர்.
ப்ளெஸ்டியா அலகாட்: இவர் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர். போர் அச்சம் இல்லாமல், இவர் தன்னிடம் இருக்கும் மொபைலை கொண்டு களத்தில் இஸ்ரேல் ராணுவத்தால் சிதைக்கப்பட்டுவரும் காசாவை ஆவணப்படுத்தி வருகிறார். சனிக்கிழமை ஹமாஸ் தொடங்கிய மோதலுக்கு பின் காசா மக்களின் வாழ்க்கை எப்படி மாறியது என்பதை இவர் ஆவணப்படுத்தி வருவது வலைதளங்களில் கவனம்பெற்று வருகிறது.
மிக்கி டுபெரி: இவர் ஒரு அமெரிக்க பத்திரிகையாளர். இஸ்ரேல் தலைவர் டெல் அவிவ்-வில் நடக்கும் தகவல்களை அமெரிக்க சேனல் ஒன்றுக்கு அளித்து வருகிறார். 23 வயதே ஆகும் இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் அமெரிக்காவில் இருந்து டெல் அவிவ் நகருக்கு குடிபெயர்ந்தார் எனச் சொல்லப்படுகிறது. சனிக்கிழமை ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பின் இஸ்ரேலின் பல நகரங்களுக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து வருகிறார்.
மேலும், இரு தரப்பு மோதலால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை மையப்படுத்தி செய்திகளை உலகறிய செய்துவருகிறார். சமீபத்தில் அமெரிக்க தொலைக்காட்சி சேனலிடம் பேசிய மிக்கி “போர் மனிதகுலத்தை பாதிக்கும்” எனக் கூறி இருதரப்பும் பொதுமக்கள் மீது கொஞ்சமாவது அக்கறை கொள்ள வேண்டும் என நேரலையில் வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, சர்வதேச மகளிர் ஊடக அறக்கட்டளையின் தகவலின்படி, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போரின் முதல் மூன்று நாட்களில் ஏழு பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர் எனத் தெரியவந்துள்ளது.
இதனிடையே, ஹமாஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இஸ்ரேலியர்களை விடுவித்தால் மட்டுமே காசாவுக்கு மின்சாரம், தண்ணீர், எரிபொருள் ஆகியவற்றை வழங்குவோம் என்று இஸ்ரேல் நிபந்தனை விதித்துள்ளது.
அதேவேளையில், ஹமாஸ் – இஸ்ரேல் போர் குறித்து ஈரான் நாட்டு அதிபர் இப்ராஹிம் ரைசி, சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இருவரும் தொலைபேசியில் விவாதித்துள்ளனர். உலக அரங்கில் மிக முக்கியமான நகர்வாக இது பார்க்கப்படுகிறது.