புதுடில்ல திருமணமான பெண்ணின், 26 வார கர்ப்பத்தை கலைக்க அனுமதி அளித்த உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்திய மத்திய அரசின் மனு மீது, உச்ச நீதிமன்றத்தின் இரு பெண் நீதிபதிகள் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கி உள்ளது. பெண்ணின் முடிவுக்கு மதிப்பளித்து கருக்கலைப்புக்கு நீதிபதி பி.வி.நாகரத்னா அனுமதி அளித்த நிலையில், ”கருவின் இதயத் துடிப்பை நிறுத்தும்படி, எந்த நீதிமன்றம் அனுமதி வழங்கும்?” என, உருக்கமாகக் கேள்வி எழுப்பி, கருக்கலைப்புக்கு நீதிபதி ஹிமா கோஹ்லி எதிர்ப்புத் தெரிவித்தார்.
புதுடில்லியைச் சேர்ந்த, 27 வயது திருமணமான இளம்பெண் ஒருவர், தன் 26 வார கர்ப்பத்தை கலைக்க அனுமதி அளிக்கும்படி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதாலும், ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், மூன்றாவதாக ஒரு குழந்தையை வளர்க்க பொருளாதார வசதி இல்லாத காரணத்தாலும், கருக்கலைப்பு செய்ய, அவர் அனுமதி கோரினார்.
இந்த மனுவை சமீபத்தில் விசாரித்த உச்ச நீதிமன்றம், புதுடில்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் அளித்த மருத்துவ பரிந்துரையின்படி கருவை கலைக்க அனுமதி வழங்கியது.
இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய அமர்வு முன், மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாத்தி நேற்று முன்தினம் முறையிட்டார்.
அப்போது, ‘அந்த பெண்ணின் வயிற்றில் உள்ள சிசு வளர்ச்சி அடைந்து விட்டதால், கருக்கலைப்பு செய்வது, சிசு கொலைக்கு சமம் என டாக்டர்கள் கூறிய நிலையிலும், கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது’ என, தெரிவித்தார்.
மனு தாக்கல்
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அமர்வு, கருக்கலைப்பை நிறுத்தி வைக்கும்படி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, கருக் கலைப்புக்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்பப் பெறக் கோரி, மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை, உச்ச நீதிமன்ற பெண் நீதிபதிகள் ஹிமா கோஹ்லி மற்றும் பி.வி.நாகரத்னா அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.
அப்போது, இந்த வழக்கில் இரு பெண் நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர்.
”கருவின் இதயத் துடிப்பை நிறுத்தும்படி எந்த நீதிமன்றம் அனுமதி வழங்கும்?” என, உருக்கமாகக் கேள்வி எழுப்பி கருக்கலைப்புக்கு நீதிபதி ஹிமா கோஹ்லி எதிர்ப்புத் தெரிவித்தார். அதே சமயம், பெண்ணின் முடிவுக்கு மதிப்பளித்து கருக் கலைப்புக்கு நீதிபதி பி.வி.ராகரத்னா அனுமதி வழங்கினார்.
நீதிபதி ஹிமா கோஹ்லி கூறியதாவது:
இரு நாட்களில், எய்ம்ஸ் மருத்துவமனை வழங்கிய மருத்துவ அறிக்கை முற்றிலும் மாறுபட்டுள்ளது.
சம்மதம்
இதை முன்னரே ஏன் வழங்கவில்லை? கருவின் இதயத் துடிப்பை நிறுத்தும்படி, எந்த நீதிமன்றம் அனுமதி வழங்கும்? நிச்சயம், நான் அனுமதிக்க மாட்டேன். ஆனால், இந்த விவகாரத்தில், சக நீதிபதி பி.வி.நாகரத்னா மாறுபட்ட கருத்தை கொண்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
நீதிபதி பி.வி.நாகரத்னா கூறியதாவது:
மனுதாரரான கர்ப்பிணி பெண், கர்ப்பத்தைத் தொடர வேண்டாம் என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார். அப்படியிருக்கையில், உறுதியான நிலைப்பாட்டை கருதி, அவருடைய முடிவுக்கு மதிப்பளிக்க வேண்டும். அவருடைய நலன் சார்ந்த விஷயம் எனும் போது, குழந்தை பிறக்கிறதா அல்லது பிறக்காதா என்பது முக்கியமல்ல.
மனுதாரருக்கு ஏற்கனவே இரு குழந்தைகள் இருப்பதாலும், பொருளாதார நிலையை கருதியும், கருக்கலைப்பு செய்ய அவர் எடுத்த முடிவுக்கு நான் சம்மதம் தெரிவிக்கிறேன். இந்த முடிவை, நீதிமன்றம் மதிக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, இந்த விவகாரத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் முடிவெடுக்க, இரு நீதிபதிகளும் பரிந்துரைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்