புதுடில்லி, புதுடில்லியில், கொள்ளையர்கள் திருடிச் சென்ற வாடகை காரை தடுத்து நிறுத்த முயன்ற ஓட்டுனர், 200 மீட்டர் தொலைவுக்கு சாலையில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹரியானாவைச் சேர்ந்த பிஜேந்திரா, 43. வாடகை கார் ஓட்டுனரான இவர், புதுடில்லி மஹிபால்பூர் பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு சென்றபோது, மர்ம நபர்கள் சிலர், இவரை தாக்கி விட்டு, வாகனத்தை திருடிச் சென்றனர்.
அவர்களை தடுக்க முயன்ற பிஜேந்திரா மீது, காரை ஏற்றி அக்கும்பல் தப்பித்தது.
எனினும், புதுடில்லி – குருகிராம் தேசிய நெடுஞ்சாலையில் அவர்களை துரத்திச் சென்ற பிஜேந்திரா, காரைப் பிடித்தபடி ஓடினார்.
இதை கண்ட அந்த கும்பல், காரை வேகமாக ஓட்டினர். 200 மீட்டர் தொலைவுக்கு சென்றபின், உடல் மற்றும் தலையில் படுகாயம் அடைந்த பிஜேந்திரா, சாலையில் மயங்கி விழுந்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தப்பியோடிய கும்பலை, ஆறு தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட, ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதைஅடுத்து, குற்றவாளிகளை விரைவில் கைது செய்யும்படி கோரிக்கை வலுத்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement