சென்னை: தமிழக இளைஞர்களுக்கு கட்டணமின்றி கோடிங் பயிற்சி அளிக்கும் வகையில் சென்னை ஐஐடி-ன் தொழில் ஊக்குவிப்பு நிறுவனமான குவி, ‘நான் முதல்வன்-தமிழ்நாடு கோடர்ஸ் பிரீமியர் லீக்’கைத் தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கை: “சென்னை ஐஐடி, ஐஐஎம் அகமதாபாத் ஆகியவற்றின் தொழில் ஊக்குவிப்பு நிறுவனமான குவி (GUVI) தமிழ்நாட்டில் ஒரு லட்சம் பொறியியல் மாணவர்களுக்கு தொடர்ச்சியாக ஹேக்கத்தான்கள் மூலம் பயிற்சி அளிக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. ‘நான் முதல்வன்- தமிழ்நாடு கோடர்ஸ் பிரீமியர் லீக் (NM-TNcpl) என்றழைக்கப்படும் இந்த முயற்சிக்காக, தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றோடு இந்நிறுவனம் கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
NM-TNcpl எனப்படும் இத்திட்டத்தின் மூலம் மூன்று மாதங்களுக்கு தொடர்ச்சியாக ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஹேக்கத்தான்கள் நடத்தப்படும். தமிழகத்தில் உள்ள ஆர்வமுள்ள பொறியியல் மாணவ-மாணவிகள் தங்களின் கோடிங் திறமையை வெளிப்படுத்தவும், மதிப்புமிக்க வாய்ப்புகளைப் பெறவும் இலவசமாகக் கிடைக்கும் தளமாக இருக்கும். இந்த தொடர் ஹேக்கத்தான் மூலம், தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளின் சிக்கலான அறிக்கைகளுக்கு தீர்வு காணவும், அவற்றைச் சமாளிக்க புதுமையான தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்கவும் மாணவர்கள் முயற்சிகளை மேற்கொள்வார்கள். முன்னோடியான இந்த முன்முயற்சியை தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 6ம் தேதி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.
ஆர்வமுள்ள பொறியியல் கல்லூரி மாணவ-மாணவிகள் எந்த டொமைனில் இருந்தும் NM-TNcpl திட்டத்தில் பங்கேற்கலாம். பின்வரும் இணைப்பைப் பயன்படுத்தி அவர்கள் இலவசமாகப் பதிவு செய்து கொள்ளலாம் – https://bit.ly/3ZJhjsw.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் துறைகளில் ஆர்வமுள்ளவர்கள் சுயவேகக் கற்றல் வாயிலாக தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகள், ஜென் கிளாஸ் கேரியர் புரோகிராம்ஸ் மற்றும் குறிப்பிட்ட பிரிவினர் பயன்படுத்தும் எட்டெக் (EdTech) சேவைகள் பற்றியும் கற்க குவி உறுதுணையாக நிற்கிறது. மாணவர்கள் தங்கள் தாய்மொழியிலேயே கற்க ஏதுவாக ஆன்லைன் தளத்தை இந்நிறுவனம் உருவாக்கி இருப்பதுடன், அவர்களின் திறமையை மேம்படுத்தி பணிக்குத் தயார்படுத்த சிறப்புத் தகவல் தொழில்நுட்ப படிப்புகளையும் வழங்குகிறது.
திருச்செங்கோட்டில் கேஎஸ்ஆர் கல்வி நிறுவனங்கள், சேலம் அன்னபூர்ணா பொறியியல் கல்லூரி மற்றும் பல கல்லூரிகள் இந்த மாபெரும் ஹேக்கத்தான் தொடரை நடத்தும் தொடர்பு மையங்களாக குவி-யுடன் கூட்டுச் சேர்ந்துள்ளன. இந்த முன்முயற்சியின் முக்கியத்துவம் குறித்து விளக்கிய, குவி-யின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான எம்.அருண்பிரகாஷ், “தமிழ்நாட்டின் இளைஞர்களை மேம்படுத்தும் எங்கள் பணியில் NM-TNcpl திட்டம் ஒரு மைல்கல்லாகும். தொழில்நுட்பத்திற்கும் கல்விக்கும் எதையும் மாற்றும் சக்தி உண்டு என்பது எனது திடமான நம்பிக்கை. தரமான தொழில்நுட்பக் கல்வியை அனைவரும் அணுகும் இலக்குடன் எங்களது குழு இப்பயணத்தைத் தொடங்கியிருக்கிறது. அத்துடன் NM-TNcpl எங்களின் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாக விளங்குகிறது” எனக் குறிப்பிட்டார்.
மேலும் அவர், “NM-TNcpl கோடர்களுக்கு போட்டிச்சூழலை வழங்குவது மட்டுமின்றி, கணக்கிலடங்கா வாய்ப்புகளையும் வழங்குகிறது. சிறப்பாக செயல்படும் அணிகளுக்கு ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசுடன் இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளும் கிடைக்கின்றன. மேலும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), தரவு அறிவியல் (Data Science), முழு அடுக்கு மேம்பாடு (Full Stack Development) போன்ற பிரபலமான தொழில்நுட்பக் கருப்பொருள்களில் கவனம் செலுத்தும் வகையில் NM-TNcpl வடிவமைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
குவி-யின் NM-TNcpl திட்டத்தில் இணைவதால் கிடைக்கும் முக்கிய நன்மைகள்: 1. இலவச திறன் மேம்பாட்டுப் படிப்புகள்: பங்கேற்பாளர்கள் குவி-யில் இருந்து இலவச பிரீமியம் படிப்புகளுக்கான வாய்ப்புகளைப் பெறுவார்கள். இதனால் அவர்கள் கட்டணம் ஏதுமின்றி தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள முடியும். உள்ளடக்கிய தன்மை, கல்வி மற்றும் திறன் வளர்ப்பு போன்றவை பரந்த அளவிலான மாணவர்களுக்குக் கிடைக்கச் செய்ய இந்த இலவச வாய்ப்பு ஊக்குவிக்கிறது. 2. நிபுணர் வழிகாட்டல்: நிலை-1க்கு தகுதி பெற்றவர்கள், தரமான வழிகாட்டல், சிறந்த வாய்ப்புகள் கிடைத்தல் போன்றவற்றை உறுதி செய்யும் வகையில் சிறந்த நிறுவனங்களின் நிபுணர்களிடம் இருந்து வழிகாட்டலைப் பெற முடியும். 3. திறமையை வெளிக்காட்டல்: இத்திட்டத்தின் வாயிலாக மிகச் சிறந்த செயல்திறன் கொண்ட அணிகள் பட்டியலிடப்பட்டு, தொழில்நுட்பம் மற்றும் புரோகிராமில் அவர்களின் திறமையை வெளிக் கொணரும் வகையில் தளம் அமைத்துக் கொடுக்கப்படும். குவி-யின் NM-TNcpl திட்டத்தில் சிறந்த நிறுவனங்கள் மற்றும் சந்தையில் முன்னணியில் உள்ள பலர் கூட்டாண்மையில் இருப்பதால், தொழில்நுட்பத் துறையில் சிறந்த நிறுவனங்களின் உரிமையாளர்களிடம் மாணவர்களின் திறமையை எடுத்துரைக்கச் செய்ய முடியும். 4. நெட்வொர்க்கிங் வாய்ப்புகள்: பங்கேற்பாளர்கள் தங்கள் தொழில்முறை நெட்வொர்க்கை விரிவுபடுத்திக் கொள்ளும் வகையில் ஒரே மாதிரியான சிந்தனை உடைய தனிநபர்கள், தொழில் வல்லுநர்களுடன் இணைந்து செயல்படலாம். 5. பரிசுகளை அளித்தல்: கற்றல் மற்றும் போட்டி அனுபவங்கள் மட்டுமின்றி, தனிச்சிறப்பு கொண்ட அணிகளுக்கு பல்வேறு வழிகளில் வெகுமதிகள் கிடைக்கப் பெறும் வகையில் ரொக்கப் பரிசுகள் மற்றும் இண்டர்ன்ஷிப் வாய்ப்புகளை இந்த மகத்தான நிகழ்வு வழங்குகிறது.
இந்த முன்முயற்சி குறித்துப் பேசிய குவி-யின் இணை இயக்குநரான பாலமுருகன் பழனிசாமி, “தொழில்நுட்ப உலகில் ஒவ்வொரு தனி நபரும், அவரவர் பின்னணியைப் பொருட்படுத்தாமல் ஏதோ ஒரு வாய்ப்புக்கு தகுதியானவர் என குவி உறுதியாக நம்புகிறது. இந்த நம்பிக்கையோடு தமிழகத்தில் உள்ள இளம்தலைமுறையினருக்கு சமமான வாய்ப்பை NM-TNcpl வழங்கியிருப்பதுடன், அனைவருக்கும் சமமான ஒரு களத்தை அமைத்துக் கொடுத்து, உள்ளடக்கிய தன்மையை மேம்படுத்துகிறது” எனத் தெரிவித்தார்.
முதல்கட்டமாக பதிவுசெய்யும் செய்யும் நடைமுறைகளை முடித்தபின், TNcpl வழங்கும் அனைத்து சலுகைகள் குறித்தும் அறிந்து கொள்ளலாம். மூன்று பங்கேற்பாளர்கள் உறுப்பினர்கள் சேர்ந்தபின் ஒரு குழுவாக இயங்குவார்கள். பதிவு உறுதிசெய்யப்பட்ட உடன், அடுத்து வரவிருக்கும் ஹேக்கத்தான்கள், திறன்மேம்பாட்டு படிப்புகளுக்கு பங்கேற்கும் குழுக்கள் தயாராகிவிட வேண்டும். கல்லூரி ஆசிரியர்களுக்கு குவி வழங்கும் ஆசிரிய மேம்பாட்டுத் திட்டங்களை (FDPs) வழிகாட்டுநர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள்.
ஜீ டிஜிட்டல் வழங்கிய ‘India’s Most Trusted EduTech Award’ உள்ளிட்ட பல்வேறு மதிப்புமிக்க விருதுகளை அண்மையில் குவி நிறுவனம் வென்றுள்ளது. குவி-யின் இணைநிறுவனரும், முன்னாள் தலைமை இயக்கக அதிகாரியுமான ஸ்ரீதேவி அருண்பிரகாஷின் ஊக்கமளிக்கும் சிந்தனைகளை மேம்படுத்தும் வகையில், திறமையான கற்றல் மற்றும் மேம்பாட்டை வழங்கும் நவீனக் கல்வி
முறைகளுடன், உலகத் தரம் வாய்ந்த எட்டெக் (EdTech) சேவைகளை வழங்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. குவி 150-க்கும் மேற்பட்ட சுயவேகப் படிப்புகளை வழங்குகிறது. இதன்மூலம் தொழில்நுட்ப ஆர்வலர்கள் தங்களுக்கு விருப்பமான தாய்மொழியிலேயே கற்கவும், திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் ஏதுவாக ஆன்லைன் கற்றல் முறையை இந்நிறுவனம் மேம்படுத்தியுள்ளது.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.