கன்னியாகுமரி மாவட்டம், புத்தளம் மணவாளபுரத்தை சேர்ந்தவர் முத்துராஜ். கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி ரதி. இவர்களது ஒன்றரை வயது மகன் ஸ்ரீஹரிஷ். தசரா திருவிழாவை முன்னிட்டு குலசேரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் மாலை அணிந்துகொண்டு விரதம் மேற்கொள்வதற்காக வந்துள்ளனர். தொடர்ந்து திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்துள்ளனர். கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் தங்கியிருந்த போது கடந்த 5-ம் தேதி ரதியிடம் பழகி அறிமுகமாகிய பெண், ஐஸ்கிரீம் வாங்கி வருவதாகச் சொல்லிவிட்டு அவரின் குழந்தை ஹரீஷை கடத்தி தன் கணவருடன் பைக்கில் சென்றார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/1697091908_826_IMG_20231010_WA0010.jpg)
ரதி கொடுத்த புகாரின் பேரில் திருச்செந்தூர் கோயில் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். மாவட்ட எஸ்.பி., பாலாஜி சரவணனின் உத்தரவின் பேரில் தனிபடை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தினர். கோயில் வளாகம், கடைவீதிகளில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தபோது ரதியிடம் நட்பாகப் பழகிய அதே பெண், குழந்தை ஸ்ரீஹரீஷை தூக்கிக்கொண்டு, செல்போனில் பேசியபடியே ஒருவரின் பைக்கில் அமர்ந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
விசாரணையில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன், அவரது மனைவி திலகவதி என்பது தெரிய வந்தது. கோவை மாவட்டம் பூண்டி பகுதியில் தலைமறைவாக இருந்த இருவரையும் ஆலந்துறை காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து ஒன்றரை வயது குழந்தை ஸ்ரீ ஹரிஷ், சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள பாண்டியனின் தாய் பச்சையம்மாளிடமிருந்து மீட்கப்பட்டது. இதற்கிடையே திலகவதி காவல் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். மேலும் மீட்கப்பட்ட குழந்தை ஸ்ரீ ஹரிஷ் 5 நாட்களுக்கு பிறகு திருச்செந்தூரில் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/20231006_113512.jpg)
கைது செய்யப்பட்ட பாண்டியன், திருச்செந்தூர் கோயில் காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், “சேலம் மாவட்டம் ஓலைப்பாடி தென்னைபிள்ளையூர் எனது சொந்த ஊர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த திலகவதிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது எனது வீட்டாருக்குப் பிடிக்காததால் இருவரும் தனியாக வசித்து வந்தோம். டிரைவராக வேலை பார்த்து வந்த எனக்கு போதிய வருமானம் இல்லாததால் 10 லட்சம் ரூபாய் வரை கடன் ஏற்பட்டது.
இந்தக்கடனை அடைக்க என்ன செய்யலாம் என யோசித்த போதுதான் குழந்தையை கடத்தி விற்க திட்டமிட்டோம். இன்னும் சில நாட்களில் குலசேகரன்பட்டினம் கோயிலில் தசரா திருவிழா தொடங்க இருப்பதால், திருவிழாவிற்கு சில நாட்களுக்கு முன்பே பக்தர்கள் மாலை அணிந்து கோயில் வளாகத்தில் தங்கி விரதம் மேற்கொள்வதால் அங்கு சென்றால் கோயிலுக்கு குழந்தையுடன் வந்திருக்கும் குடும்பத்தினரிடம் நட்பாகப் பழகி குழந்தையை கடத்தலாம் என முடிவு செய்தோம். முத்தாரம்மன் கோயில் வளாகத்தில் தங்கி இருந்த தங்கியிருந்த முத்துராஜ், அவரது மனைவி ரதியுடன் திலகவதி அறிமுகமாகி பழகினார். அவர்கள் அங்கிருந்து திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் செல்கிறோம் எனச் சொன்னதும் நானும் திலகவதியும் அவர்களுடன் திருச்செந்தூருக்குச் சென்றோம். அங்கும் அவர்களுடன் தங்கினோம்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/IMG_20231012_WA0003.jpg)
இந்த வாய்ப்பை பயன்படுத்தி குழந்தைக்கு ஐஸ் கிரீம் வாங்கி வருவதாகச் சொல்லிவிட்டு குழந்தையை தூக்கிக்கொண்டு கோயில் வளாகத்திற்கு வெளியே திலகவதி வந்தாள். பைக்கில் காத்திருந்த நான் திலகவதி மற்றும் குழந்தையை அழைத்துக் கொண்டு பைக்கில் சேலம், ஓலைபாடி தென்னம்பிள்ளையூருக்கு சென்றோம். அங்கு எனது தாயிடம் குழந்தையை பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு வெளியூருக்கு கிளம்பினோம். குழந்தையை விற்று கிடைக்கும் பணத்தில் கடனை அடைக்கலாம் என நினைத்தோம். செல்லும் வழியில் ஆலாந்துறை போலீஸார் எங்களை பிடித்து விட்டனர். விசாரணையில் மயங்கிய திலகவதி இறந்துவிட்டார்” எனக் கூறியுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.