பால் மூலமும் பரவும்… கால்நடைகளிலிருந்து தொற்றும் புரூசெல்லோசிஸ் நோயால் கேரளாவில் அச்சம்..!

கேரள மாநிலத்தில் வெளவால்களால் பரவும் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் நலம் அடைந்த நிலையில், கால்நடைகள் மூலம் பரவும் புரூசெல்லோசிஸ் நோய் கண்டறியப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் வட்டப்பாறை பகுதியைச் சேர்ந்த ஜோஸ் மற்றும் அவரின் மகன் ஜோபி ஆகியோருக்கு புரூசெல்லோசிஸ் நோய் பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவருக்கும் திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜோஸ் தனது வீட்டில் பசுக்களை வளர்த்துவரும் நிலையில் அவற்றின் மூலம் புரூசெல்லோசிஸ் நோய் பரவியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மேலும், பசும்பாலின் மூலமும் இந்த நோய் பரவ வாய்ப்பு உள்ளதாகவும் கேரளா கால்நடைத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.

கேரள பால்வளத்துறை அமைச்சர் சிஞ்சுராணி

இதுகுறித்து கேரள கால்நடைத்துறை அமைச்சர் சிஞ்சுராணி கூறுகையில், “புரூசெல்லோசிஸ் நோய் கால்நடைகள் மூலம் மனிதர்களுக்குப் பரவும் நோய். சாதாரணமாக மாடுகள், ஆடுகள், பன்றிகள் மூலம் மனிதர்களுக்குப் பரவும்.

கால்நடைகளிடம் இந்த நோய்க்கு எனத் தனி அறிகுறிகள் எதுவும் தென்படாது. கர்ப்பச்சிதைவு மட்டுமே இந்த நோய்க்கான அறிகுறி. எனவே, சாதாரணமாக இந்த நோயை கண்டறிவது மிகவும் சிரமமானது.

கால்நடைகளின் கர்ப்பம் கலைந்து வெளியேறும் திரவம் உள்ளிட்டவை மூலம் இந்த நோய் மனிதர்களுக்குப் பரவுகிறது. எனவே கருகலைந்த கால்நடைகளின் திரவங்களை அகற்றும் சமயங்களில் கை உறைகள் அணிந்துகொண்டால் ஓரளவுக்கு கிருமிகள் பரவாமல் தடுக்க முடியும். மேலும் அந்தக் கழிவுகளை ஆழமாகக் குழி தோண்டி  சிமென்ட் கலவையால் மூட வேண்டும்.

மாடுகளில் இருந்து கிடைக்கப்பெறும் பால் மூலமும் இந்த நோய் பரவும். எனவே பாலை நன்கு கொதிக்கவைத்து பயன்படுத்தவேண்டும். பாலை நன்கு கொதிக்கவைக்காமலோ, பதப்படுத்தாமலோ பயன்படுத்தக்கூடாது.

புரூசெல்லோசிஸ்

இந்த நோயால் கால்நடைகளுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுகிறது. கால்நடைகள் வளர்க்கும் பகுதிகளில் கிருமி நாசினிகளை தெளிப்பதுடன், தனிநபர் சுகாதாரமாக இருப்பதும் அவசியமாகும். வெம்பாயம் பஞ்சாயத்தில் நோய் பரவியதைத் தொடர்ந்து ஸ்டேட் இன்ஸ்டிட்யூட் ஃபார் டிசீசஸ் சீஃப் வெட்ரினரி ஆஃபீசர் உள்ளிட்டோர் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். புரூசெல்லோசிஸ் நோய் பாதித்த வீட்டில் உள்ள 4 பசுக்களும் நல்ல நிலையில் உள்ளன. வெம்பாயம் பஞ்சாயத்தில் பால் கூட்டுறவு சங்கங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். அப்பகுதியில் பசு வளர்க்கும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.