புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில், அமைச்சராக இருந்தவர் காரைக்கால் நெடுங்காடு தொகுதியின் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏவான சந்திர பிரியங்கா. போக்குவரத்து, ஆதிதிராவிடர் நலன் மற்றும் தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளை வைத்திருந்த இவர், சாதி மற்றும் பாலின ரீதியில் தாக்கப்படுவதால் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக இரு தினங்களுக்கு முன்னர் அறிவித்தார். அவரின் ராஜினாமா முடிவு ஏற்படுத்திய அதிர்ச்சியைவிட, அவர் வைத்த குற்றச்சாட்டுகள் புதுச்சேரி அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்திருக்கும் நிலையில், இது தொடர்பாக கருத்து கூறியிருக்கிறார் துணைநிலை ஆளுநர் தமிழிசை.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/Untitled_1.jpg)
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அரசியலில் எந்த பெண் பாதிக்கப்பட்டாலும் அதற்காக நான் வருத்தமைடைவேன். சகோதரி சந்திர பிரியங்கா அவரின் பிரச்னைகள் குறித்து பெண் துணைநிலை ஆளுநரான என்னிடம் சொல்லியிருக்கலாம். ஆனால் ஒருநாளும் என்னிடம் அவர் எதையும் சொன்னதில்லை. பெண் அமைச்சர் ஒருவர் இருக்க வேண்டும் என்பதற்காகவே, முதலமைச்சர் அவர்கள் சந்திர பிரியங்காவுக்கு அந்த வாய்ப்பை வழங்கினார்கள். ஆனால் ஆறு மாதங்களுக்கு முன்பாகவே அமைச்சர் சந்திர பிரியங்காவின் நடவடிக்கைகளில் தொய்வு இருப்பதாக நினைத்த முதல்வர் அவர்கள், அப்போதே சில நடவடிக்கைகளை எடுக்க விரும்பினார். அப்போது முதல்வர் அவர்களிடம், ’நம்மிடம் இருப்பது ஒரு பெண் அமைச்சர். மேலும் அவரிடம் போக்குவரத்துத் துறை, ஆதிதிராவிடம் நலத்துறை, தொழிலாளர் துறை உள்ளிட்ட முக்கிய துறைகள் இருக்கின்றன.
அதனால் அவரை அழைத்துப் பேசி பணியாற்ற வையுங்கள்’ என்று சொன்னேன். ஆனால் மறுபடியும் முதல்வர் அவர்கள் அமைச்சர் சந்திர பிரியங்காவின் நடவடிக்கைகளில் திருப்தி இல்லை என்றும், அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்றும் சொன்னார்கள். அதனால் அவர் ராஜினாமா முதலில் கிடையாது. அதற்கு முன்பே அவரின் பணி திருப்தியாக இல்லை என்ற காரணத்தினால் முதல்வர், அவர் மீது நடவடிக்கை எடுத்துவிட்டார். இதில் எனக்கு இருக்கும் ஒரே வருத்தம், சந்திர பிரியங்கா சில காரணங்களை சொல்லியிருக்கிறார். அவருக்கு அங்கு சாதியப் பாகுபாடு இருந்தது என்பதை நான் ஒரு நாளும் பார்த்தது கிடையாது. முதலமைச்சர் அவர்கள் சந்திர பிரியங்காவை தன் சொந்த மகளாகவேதான் நடத்தினார். அதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/F306G6MWwAEYuZh.jpg)
அதேபோல கட்சியில் சீனியர்கள் பலர் இருந்த நிலையிலும், ஒரு பெண்ணுக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் சந்திர பிரியங்காவுக்கு அந்த வாய்ப்பை கொடுத்தார் முதல்வர். சந்திர பிரியங்காவுக்கு இவ்வளவு பிரச்னைகள் இருந்தது என்றால் என்னைப் போன்றவர்களிடம் சொல்லியிருக்கலாம். சாதிய ரீதியாக, பாலின ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தால் என்னைப் போன்றவர்களிடம் சொல்லியிருந்தால், துணிச்சலுடன் அவருக்கு நான் பாதுகாப்பாக நின்றிருப்பேன். அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது. இதில் நான் எதுவும் செய்ய முடியாது. ஏனென்றால் முதலமைச்சர், அவரின் அமைச்சரவையில் இருந்த, அவர் கட்சியைச் சேர்ந்த ஒருவரை நீக்கியிருக்கிறார். புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் இங்கு சில வழிமுறைகள் இருக்கின்றன.
மற்ற மாநிலங்களில் முதலமைச்சர் கடிதத்தை கொடுத்தவுடன், ஆளுநர் அதை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் இது யூனியன் பிரதேசம் என்பதால் முதல்வரின் கடிதத்தை மத்திய அரசுக்கு அனுப்பி, குடியரசுத் தலைவரிடம் இருந்து ஒப்புதல் வர வேண்டும். இவை அனைத்தும் முதல் நாளே நடைபெற்றது. அதை தெரிந்து கொண்ட அவர், ராஜினாமா செய்வதைப் போல செய்திருக்கிறார். ஆனால் அரசியலில் ஒரு பெண் எந்த வகையில் வருத்தப்பட்டாலும், அது என்னை வருத்தமடையச் செய்யும். ஆனால் அவருக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்தியிருக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து. ஒரு பெண் என்கிற முறையில் வரும் காலத்தில் அவருக்கு தேவைப்படும் ஆதரவை தருவதற்கு நான் தயாராகவே இருக்கிறேன்.
ஏனென்றால் அரசியலில் ஒரு பெண் மேலே வருவது என்பது மிக சிரமமான காரியம். ஆனால் அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடந்த ஆறு மாத காலமாகவே சந்திர பிரியங்காவின் துறையில் ஒரு அதிருப்தி நிலவியது. முதலமைச்சரே அதை கூறும்போது, துணை நிலை ஆளுநரான என்னால் அதற்கு மறுப்பு தெரிவிக்க முடியாது. ஆறு மாதங்களுக்கு முன்பாகவே இப்படி ஒரு சூழல் வந்தது. அப்போதே ஒரு பெண் என்ற முறையில் சந்திர பிரியங்காவை பாதுகாப்பதற்கான முயற்சிகளை நான் மேற்கொண்டேன். அனைத்து நேரங்களிலும் அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதைகள் கொடுக்கப்பட்டது என்பதை என்னால் தெளிவாகக் கூற முடியும்” என்றார்.
அமைச்சர் பதவியில் இருந்து தன்னை நீக்கும் நடவடிக்கையை அறிந்து தான் தனது பதவியை ராஜினாமா செய்தார் சந்திர பிரியங்கா என்ற ஆளுநர் தமிழிசையில் கருத்து புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.