வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஜெருசலேம்: ஹமாஸ் பயங்கரவாதிகளுடன் போர்க்களத்தில் சண்டையிட்ட 19 வயது இஸ்ரேல் இளம் ராணுவ வீராங்கனை கார்ப்ரல் நமா போனி என்பவர், தனது குடும்பத்தினருக்கு, போர் நிலவரம் தொடர்பாக அவ்வபோது மெசேஜ்-ல் தகவல் தெரிவித்து வந்தார். இறுதியில் அவர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்.
இஸ்ரேல் – ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையே 6 நாளாக போர் நீடித்து வருகிறது. இதில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலிய ராணுவப் படையினர் ஹமாஸ் பயங்கரவாதிகளுடன் கடுமையாக போரிட்டு வருகின்றனர். இந்த நிலையல் இஸ்ரேலின் 77வது பட்டாலியன் ராணுவப் படையை சேர்ந்த கார்ப்ரல் நமா போனி என்ற 19 வயது வீராங்கனை, ஹமாஸ் பயங்கரவாதிகளுடனான மோதலின்போது, தனது குடும்பத்தினருக்கு நடக்கும் சூழ்நிலைகளையும், தனது பாதிப்புகளையும் அடுத்தடுத்து ‘மெசேஜ்’ மூலமாக தெரியப்படுத்தியுள்ளார். தற்போது அவர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்.
போரின் போது காயங்களுடன் அடிப்பட்டு மறைவான இடத்திலிருந்து, கார்ப்ரல் நமா போனி தனது குடும்பத்தினருக்கு, மொபைல் மூலமாக, ‘நான் உங்களை நன்கு பார்த்துக்கொள்கிறேன். இப்போது என் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. எனக்கு அருகில் இருக்கும் பயங்கரவாதி என்னை சுடத் துவங்கியுள்ளார். தற்போது என்னுடன் ஒரு அடிப்பட்ட ராணுவ வீரரும் உள்ளார். இங்கு எந்தவித பாதுகாப்புப்படையும் இல்லை’ என மெசேஜ் மூலமாக தகவல் தெரிவித்துள்ளார்.
அலறல் சப்தம்
அடுத்த சில நேரங்கள் கழித்து, ‘நானிருக்கும் இடத்தில் ஒரு பயங்கரவாதியும் இருக்கிறார். அவர் அங்கிருந்து நகர்ந்து செல்லாமல் அங்கேயே இருக்கிறார். மேலும், யாரோ ஒருவர் அலறும் சப்தமும் கேட்கிறது. யாரோ இறந்திருப்பார்கள் என நினைக்கிறேன்’ என்ற செய்தியை கூறியுள்ளார். அதன்பிறகு நீண்ட நேரமாக அவரிடம் இருந்து எந்தவொரு மெசேஜ்-ம் குடும்பத்தினருக்கு கிடைக்கவில்லை.
இது தொடர்பாக கார்ப்ரல் நமா போனியின் மாமியார் ஐலுக் கூறுகையில், ”காலை 7:30 மணியில் இருந்து பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபடுவதை தொடர்ந்து மெசேஜ் மூலமாக தகவல் தெரிவித்து வந்தார். சில நிமிடங்களில் அவரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. இதனையடுத்து அவரை தொடர்பு கொண்டோம், ஆனால் பதிலளில்லை. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பிறகு தான் தெரிந்தது.
அதேநேரத்தில் அவரின் நிலை குறித்த எந்த தகவலும் அளிக்கவில்லை. நமா போனி உயிருடன் இருப்பார் என எதிர்பார்த்தோம் ஆனால் அவர் இறந்துவிட்டார் என அதிகாரிகள் தெரிவித்தனர்” என கவலையுடன் தெரிவித்தார். போனி கடந்த 7 மாதங்களுக்கு முன்புதான் ராணுவத்தில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement