ஜெய்ப்பூர்,’ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் நவ., 23ல் நடக்கும்’ என, அறிவிக்கப்பட்ட நிலையில், அன்றைய தினம் அதிக எண்ணிக்கையிலான திருமண நிகழ்வுகள் நடப்பதால், தேர்தல் தேதியை நவ., 25க்கு தலைமை தேர்தல் கமிஷன் ஒத்தி வைத்தது.
சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல், நவ., 7ல் துவங்கி, 30 வரை நடத்த தலைமை தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது.
இதில், 200 தொகுதிகள் அடங்கிய ராஜஸ்தான் சட்டசபைக்கு அடுத்த மாதம் 23ல் தேர்தல் நடத்தப்படும் என, அறிவிப்பு வெளியானது.
அன்றைய தினம், மாநிலம் முழுதும் 50,000க்கும் மேற்பட்ட திருமண நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே, அதை கருத்தில் வைத்து, மாற்றுத் தேதியில் சட்டசபை தேர்தலை நடத்த வேண்டும் என அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினர் தலைமை தேர்தல் கமிஷனுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதை தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் தலைமையிலான குழு பரிசீலித்த நிலையில், ‘ராஜஸ்தானில் நவ., 23க்கு பதிலாக நவ., 25ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கும்’ என அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தனர்.
இதுகுறித்து தலைமை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அடுத்த மாதம் 23ம் தேதி, ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் அறிவிக்கப் பட்டது.
ஆனால், அன்றைய தினத்தில் ஏராளமான திருமண நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால், வாக்காளர்கள் ஓட்டளிப்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படும்.
இதை கருத்தில் வைத்து, ஓட்டுப்பதிவை நவ., 25ம் தேதிக்கு மாற்றியுள்ளோம். வேட்பு மனுத்தாக்கல், ஓட்டு எண்ணிக்கை உட்பட மற்ற நடைமுறைகள் அனைத்தும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் நடக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர்களுக்கு தபால் ஓட்டு!
ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில், முதன்முறையாக ஊடகத்துறையினரும் தபால் ஓட்டுகள் பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை, தேர்தல் பணி மேற்கொள்ளும் ஊடகத்துறையினருக்கு மட்டுமே இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. இந்த தேர்தலில், ஊடகத்துறையைச் சேர்ந்த அனைவரும் தபால் ஓட்டளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர மின்சாரம், போக்குவரத்து, சுகாதாரம், தீயணைப்பு உட்பட இன்றியமையாத சேவைகள் அளிக்கும் எட்டுத் துறைகளைச் சேர்ந்த ஊழியர்களும் தபால் ஓட்டுகளை பதிவிடலாம் எனவும் தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்