புதுடெல்லி: பாலஸ்தீனத்தின் காசா நகர் மீது தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் ஆயத்தமாகி வருவதால், இரு நாடுகள் இடையிலான மோதல் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை பத்திரமாக மீட்டு வருவதற்காக ‘ஆபரேஷன் அஜய்’ என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா முனை பகுதியில் உள்ள ஹமாஸ் போராளி குழுக்கள் கடந்த 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, ஹமாஸுக்கு எதிராக போர் தொடங்கியதாக இஸ்ரேல் அறிவித்தது.
காசாவில் ஹமாஸ் தீவிரவாதிகளின் நிலைகளை குறிவைத்து வான்வழியாக கடும் தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியுள்ளது. பெரும்பாலான கட்டிடங்கள் தரைமட்டமானதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
காசா மீது இஸ்ரேல் விமானப்படை நடத்திய வான் தாக்குதலில் அடுக்குமாடி குடியிருப்புகள் பெரிய அளவில் சேதம் அடைந்துள்ளன. ஐ.நா. பள்ளிகளிலும், அருகில் உள்ள கட்டிடங்களிலும் மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். இருதரப்பிலும் அப்பாவி மக்கள் உயிரிழப்பு எண்ணிக்கை 2,400-ஐ தாண்டியுள்ளது.
இந்நிலையில், தரைவழி தாக்குதலை மேற்கொள்ள இஸ்ரேல் ராணுவம் ஆயத்தமாகி வருகிறது. தரைவழி தாக்குதலுக்கு தயாராக இருப்பதாக ராணுவ செய்தி தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் ரிச்சர்டு ஹெக்ட் தெரிவித்துள்ளார். ஹமாஸ் தீவிரவாதிகளின் நுக்பா படைகளின் இருப்பிடங்களை குறிவைத்து நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியது. இவர்கள்தான் கடந்த வாரம் ராக்கெட்குண்டு தாக்குதல் நடத்தியவர்கள்.
ஹமாஸ் கடற்படையின் மூத்த தலைவர் வீட்டில் ஏராளமான ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. அங்கும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. பெய்த் லாகியா நகரில் நடத்திய வான் தாக்குதலில் தீவிரவாத அமைப்பின் கமாண்டர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையே, இருதரப்புக்கும் மோதல் வலுத்து வருவதால், இஸ்ரேலில் உள்ள 18 ஆயிரம் இந்தியர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு உள்ளவர்களை பத்திரமாக மீட்கும் பணியில் மத்தியஅரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக ‘ஆபரேஷன் அஜய்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டெல்லியில் மத்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி நேற்று கூறியதாவது:
இஸ்ரேலிய நகரங்கள் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலை இந்தியா பயங்கரவாத நடவடிக்கையாகவே கருதுகிறது. எனவேதான், இந்த விவகாரத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனம் தனது இறையாண்மை, சுதந்திரம், சாத்தியமான அரசை நிறுவுவதற்காக இஸ்ரேலுடன் நேரடி பேச்சு தொடங்க வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம்.
போர் நிலைமை மோசமாகி வருவதால், இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ‘ஆபரேஷன் அஜய்’ என்ற பெயரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு விமானம்1 2-ம் தேதி (நேற்று) மாலை இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை சென்றடைகிறது. முதல்கட்டமாக 212 இந்தியர்களை அங்கிருந்து ஏற்றிக்கொண்டு 13-ம் தேதி (இன்று) தாயகம் வந்தடையும். இதுகுறித்த விவரங்கள் மின்னஞ்சல் மூலம்இந்தியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், அனைவரும் பத்திரமாக அழைத்து வரப்படுவார்கள்.
இஸ்ரேலில் உள்ள இந்தியதூதரகம் அங்குள்ள இந்தியர்களுக்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. அங்குள்ள நிலவரத்தை இந்தியாமிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்திய தூதரக அதிகாரிகள் இந்திய நிறுவனங்களுடன் காணொலி மூலமாக நேரடியாக பேசி வருகின்றனர். குறிப்பாக, இந்திய மாணவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
இஸ்ரேலில் உள்ள பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்கள் பலர் படித்து வருகின்றனர். அவர்களது அச்சத்தை போக்கும் வகையில், இந்திய தூதரக அதிகாரிகள் நேரடியாக அவர்களை சந்தித்து பேசி வருகின்றனர். முன்னதாக, இஸ்ரேலின் அஷ்டோத் நகரில்நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் கேரளாவை சேர்ந்த ஒருவர்காயமடைந்தார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக, நேரில் சந்தித்த தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.