சைரன் ஒலி கேட்டு பதுங்கிடத்துக்கு குழந்தையுடன் ஓடினேன் – இஸ்ரேல் கள நிலவரத்தைப் பகிர்ந்த இந்தியா திரும்பிய இளம் பெண் 

புதுடெல்லி: இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு ‘ஆபரேஷன் அஜய்’ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி இன்று காலை டெல்லிக்கு முதல் விமானம் வந்தது. முதல் விமானத்தின் மூலம் 212 பேர் தாயகம் திரும்பியுள்ளனர். தாயகம் திரும்பியவர்களை மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வரவேற்றார். நாடு திரும்பியர்வகள் பலரும் இஸ்ரேல் நிலவரத்தை விளக்கினர். அவர்களில் இளம் பெண் ஒருவர் தன் கைக்குழந்தையுடன் தப்பித்ததை வேதனையுடன் நினைவுகூர்ந்தார்.

‘ஆபரேஷன் அஜய்’ திட்டத்தின் மூலம் இஸ்ரேலில் இருந்து இந்தியர்களுடன் டெல்லிக்கு வந்த அந்தப் பெண் பயணி கூறுகையில், “கடந்த வெள்ளிக்கிழமையன்று காலை 6.30 மணியளவில் திடீரென சைரன் ஒலித்தது. அந்த சத்தம் கேட்டுதான் நாங்கள் தூக்கத்திலிருந்து விழித்தோம். அது போர் அபாய சைரன் எனப் புரிந்தது. அதைக் கேட்டதும் நான் எனது கைக்குழந்தையுடன் பதுங்கிடத்தை நோக்கி ஓடினேன். பாதுகாப்பான இடத்துக்குச் செல்வதற்கு சற்று கடினமாகவே இருந்தது. இருப்பினும் எப்படியோ சமாளித்துச் சென்றுவிட்டோம். இந்தியா திரும்பியுள்ள இந்தத் தருணத்தில் நான் நிம்மதி அடைகிறேன். எங்களைப் பத்திரமாக மீட்ட இந்திய அரசுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இன்னொரு பயணி கூறுகையில், “இஸ்ரேலில் இத்தகைய சூழல் ஏற்படுவதை நான் காண்பது இதுவே முதன்முறை. எங்களை பத்திரமாக தாயகம் மீட்டுவந்த மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அங்கே மீண்டும் அமைதி திரும்பும் என்று நான் நம்புகிறேன். நிலைமை சரியானதும் மீண்டும் இஸ்ரேல் சென்று பணியைத் தொடர்வேன்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

சுபம் குமார் என்ற மாணவர் கூறுகையில், “நாங்கள் இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். போர் பதற்றம் தொடங்கியவுடனே எங்கள் (மாணவர்கள்) மத்தியில் பயம் தொற்றிக் கொண்டது. அப்போதுதான் எங்கள் அனைவரின் மொபைல் எண்ணுக்கும் இந்தியத் தூதரகத்தில் இருந்து குறுந்தகவல் வந்தது. அதைப் பார்த்ததும் நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம். தொடர்ந்து அவர்கள் எங்களுக்கு வழிகாட்டிக் கொண்டே இருந்தார்கள். அதனால் எங்களுக்கு நம்பிக்கை துளிர்த்தது. பின்னர் நாங்கள் பத்திரமாக நாடு திரும்ப தூதரம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தது. இதோ நாடு திரும்பியுள்ளோம்” என்றார்.

டெல்லி வந்தடைந்த 21 தமிழர்கள்: இன்று வந்தடைந்த விமானத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 21 பேர் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் அனைவரும் டெல்லியில் இருந்து சென்னை மற்றும் கோவைக்கு விமானம் மூலம் அழைத்து வரப்படுகின்றனர். பிற்பகலில் அவரவர் பகுதிக்கு சென்றடைவர் எனத் தெரிகிறது.

இஸ்ரேல் எச்சரிக்கை: இந்நிலையில் காசாவில் வசிக்கும் 10.1 லட்சம் பாலஸ்தீனியர்களும் அடுத்த 24 மணி நேரத்துக்குள் தெற்கு நோக்கிச் சென்றுவிடுவது நல்லது என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது. தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தவுள்ள சூழலில் இஸ்ரேல் ராணுவம் ஐ.நா.விடம் 10.1 லட்சம் மக்களை காசாவின் தெற்குக்கு அப்புறப்படுத்துமாறு கோரியுள்ளதாக ஐ.நா. செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.