நீதிமன்றங்களுக்கு அவ்வப்போது விநோதமான பொதுநல வழக்குகள் வருவதுண்டு. மிகுந்த சமூக நலனுடன் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்வது வேறு. ஆனால், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் வகையில் அவ்வப்போது விநோதமான வழக்குகள் வரும்.
அவ்வகையில் ‘டார்வின் மற்றும் ஐன்ஸ்டீன் கோட்பாடுகள் தவறானவை, டார்வின் கோட்பாட்டை ஏற்றதால் 20 லட்சம் பேர் உயிரிழந்தனர்’ என்ற வாதத்துடன் மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார் ராஜ்குமார் என்பவர்.
டார்வின் பல தடைகளுக்குப் பிறகு பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து ‘பரிணாம வளர்ச்சி’ எனும் உயிரியல் கோட்பாட்டை 1837 – 1859 காலகட்டத்தில் நிறுவினார். 1905-ம் ஆண்டு ஐன்ஸ்டீன் ‘எப்பொருளும் ஓய்வு நிலையிலோ அல்லது இயங்கு நிலையிலோ இருக்கும் போது அது ஒரு குறிப்பிடத்தக்க ஆற்றலைக் கொண்டிருக்கும்’ என்ற ‘E=mc^2’ ஆற்றல் சமன்பாட்டு விதியை கண்டறிந்து வெளியிட்டார். இந்த இரண்டு கோட்பாடுகளும் சமூக இயக்கத்திலும், அறிவியல் இயக்கத்திலும், மனிதக் குல வரலாற்றிலும் பல்வேறு மாற்றங்களுக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் அடிப்படையாக இருந்து வருகின்றன.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/Darwin_evolution1.png)
இந்நிலையில் டார்வின் மற்றும் ஐன்ஸ்டீன் கோட்பாடுகள் தவறானவை என்று ராஜ்குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் விநோதமான பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் சுதன்ஷு துலியா, டார்வினின் பரிணாமக் கோட்பாடு மற்றும் ஐன்ஸ்டீனின் சமன்பாடு ஆகியவைத் தவறானவை என்று நிரூபிக்க விரும்புகிறார் மனுதாரர். அது அவர் நம்பிக்கை எனில் அதை அவர் பிரசாரம் செய்யலாம், அதற்கு அவருக்கு உரிமை உண்டு. ஆனால், இந்திய அரசியலைப்பின் 32வது பிரிவின் படி இந்த மனுவை ஏற்க முடியாது” என்று கூறினர்.
அதற்கு மனுதாரர், “இது பற்றி நான் பள்ளிக் காலத்திலும், கல்லூரிக் காலத்திலும் படித்தவையெல்லாம் இன்று எனக்குத் தவறு என்று தோன்றுகிறது. இதை நான் எங்குச் சென்று நிரூபிப்பது. அதற்கு வழி சொல்லுங்கள்…” என்றார். மேலும், டார்வின் கோட்பாட்டை ஏற்றதால் 20 லட்சம் பேர் உயிரிழந்தனர் என்பதையும் நம்ப வைக்க முயன்றார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/albert_einstein_special_theory_of_relativity_explained_emc2_evg_1392588.jpg)
அதற்கு நீதிபதிகள், “பள்ளியில் படித்தவை தவறு என்றால் அதற்கு எதிரான ஏதேனும் கோட்பாடுகள் இருப்பின் அதை அவர் மேம்படுத்தலாம். நீண்ட காலமாக இருக்கும் டார்வின் மற்றும் ஐன்ஸ்டீன் கோட்பாடுகள் தவறு என்று கருதினால், நீங்களே ஒரு கோட்பாட்டைக் கண்டறிந்து அதை முன்வைத்து நிரூபிக்கலாம்.
அதற்காக நீங்கள் எங்குச் செல்ல வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்வது நீதிமன்றத்தின் வேலையில்லை. அதை நீங்கள்தான் செய்ய வேண்டும். இந்த மனுவை ஏற்க முடியாது” என்று கூறி அவரது மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
இது குறித்து உங்களின் கருத்தை கமென்ட்டில் சொல்லுங்கள்.