"தமிழ்த் திரையுலகிற்கு இன்னொரு பாலசந்தர்!" – `சித்தா' படம் பார்த்த திருச்சி சிவா நெகிழ்ச்சி

`பண்ணையாரும் பத்மினியும்’, `சேதுபதி’, `சிந்துபாத்’ படங்களின் இயக்குநர் S.U.அருண் குமாரின் இயக்கத்தில் சித்தார்த், நிமிஷா சஜயன், சஹஸ்ரா ஸ்ரீ உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் `சித்தா’.

தன் அண்ணன் மகளுக்கும் சித்தார்த்திற்கும் இடையிலான பாசத்தையும், பாலியல் வன்கொடுமைக்கு எதிராகப் போராடும் சித்தார்த்தின் போராட்டத்தையும் கதைக்களமாகக் கொண்டுள்ள இத்திரைப்படம் கடந்த செப்டம்பர் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. திரைத்துறையில் உள்ள பலரும் இப்படத்தைப் பாராட்டி வருகின்றனர். 

சித்தா

அவ்வகையில் மாநிலங்களவை எம்.பி-யான திருச்சி சிவா, ‘சித்தா’ படத்தைப் பார்த்துவிட்டு தனக்குத் தூக்கமே வரவில்லை எனப் படத்தையும், படக்குழுவினரையும் பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்துப் பதிவிட்டுள்ள அவரது ட்வீட்டில், “சித்தா” படம் பார்த்துவிட்டு தாமதமாக உறங்கி விடியற்காலையில் படத்தின் நினைப்பு வந்து மீண்டும் தூக்கம் வராமல் எழுதியது இது!

சமுதாயத்தில் படர்ந்து கொண்டிருக்கும் ஒரு மாபாதகத்தைப் பார்ப்பவர்கள் மனம் பதறப் பதற உணர்த்தியிருக்கும் படம் சித்தா. தூக்கம் தொலைவதற்குக் காரணமான இந்த சினிமாவை மீண்டும் பார்க்கத் துணிவு இல்லை… அவசியமும் இல்லை. ஆனால் மற்றவர்கள் ஒருமுறையாவது இந்தப் படத்தைப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. சித்தார்த் என்ற ஒரேயொரு அறிமுகமான நடிகரைத் தவிர அனைவரும் புதுமுகங்கள், ஒன்று கூட சினிமா முகம் கிடையாது. ஆனால் நடிப்பினால் மனதில் ஆழமாகப் பதிந்து விடுகிறார்கள்.

இயக்குநரை ஆரத்தழுவி இதே தமிழ்த் திரையுலகிற்கு இன்னொரு பாலசந்தர் என நெற்றியில் முத்தமிட வேண்டும். கொஞ்சம் சிரமம்தான். ஆனால் யதார்த்தம் என்பதால் எச்சரிக்கை உணர்வு எல்லோருக்கும் தேவை என்பதால் பெற்றோர் அவசியம் பிள்ளைகளோடு சென்று பார்த்து வந்தால் படத்தை அங்கீகரித்துப் பாராட்டியதாக அமையும்” என்று தெரிவித்திருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.