புதுடெல்லி: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் பாதுகாப்பு ‘ஒய்’ பிரிவில் இருந்து ‘இசட்’ பிரிவுக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு(68) இதுவரை ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதை டெல்லி போலீஸார் அளித்து வந்தனர். இந்நிலையில் அவரது பாதுகாப்பு ‘இசட்’பிரிவுக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து அவரது பாதுகாப்பை டெல்லி போலீஸாரிடம் இருந்து மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சிஆர்பிஎப்) ஏற்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த இசட் பிரிவு பாதுகாப்பில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நாடு முழுவதும் எங்கு சென்றாலும், சிஆர்பிஎப் கமாண்டோக்கள் 14 முதல் 15 வீரர்கள் சுழற்சி அடிப்படையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்குவர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்திஆகியோர் உட்பட நாட்டில் 176பேருக்கு சிஆர்பிஎப் படையின் விஐபி பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.