கோலிவுட் சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் விஜய்யின் `லியோ’ படம் வரும் அக்டோபர் 19-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
உலகம் முழுவதும் அதிகமான திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது. பொதுவாக முன்னணி நடிகர்களின் படங்களுக்கு அதிகாலை 4 மணிக்குச் சிறப்புக் காட்சிகள் திரையிடப்படுவது வழக்கம். ஆனால், ‘லியோ’ படத்திற்குச் சிறப்புக் காட்சிகளைத் திரையிடுவதில் பல்வேறு சிக்கல்கள் இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது எந்தப் படத்துக்கும் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி இல்லை என்பதால் ‘லியோ’வுக்கும் அதே நிபந்தனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து ‘லியோ’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் படத்திற்குச் சிறப்புக் காட்சி வழங்கப்பட வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்திருந்தது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/Thalapathy_Vijay_Leo_Movie_Stills_HD_1.jpg)
அதில் குறிப்பாக முதல் நாள் (19-ம் தேதி), இரண்டு சிறப்புக் காட்சிகளுக்கு (அதிகாலை 4 மணி, 7 மணி என மொத்தம் ஒரு நாளைக்கு 6 காட்சிகள்) அனுமதி வேண்டும் என்றும், அடுத்தடுத்த விடுமுறை நாள்களுக்கு (20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை) ஒரு நாளுக்கு 5 காட்சிகளுக்கு (அதிகாலை 7 மணி மட்டும்) அனுமதி வேண்டும் என்றும் வேண்டுகோள் வைக்கப்பட்டிருந்தது.
இதைப் பரிசீலனை செய்த தமிழக அரசு, ஒரு நாளைக்கு 5 காட்சிகள் என மொத்தம் 6 நாள்களுக்கு அதாவது, 19-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், காலை 4 மணி காட்சிக்கான அனுமதி குறித்து அரசு தெளிவாக ஏதும் குறிப்பிடவில்லை.
இதற்கிடையில் `லியோ’ படத்தின் முன்பதிவு ஆரம்பமாகி இந்தியா மற்றும் உலகெங்கிலும் ஆயிரக் கணக்கில் டிக்கெட்கள் புக்காகிக் கொண்டிருக்கின்றன.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/WhatsApp_Image_2023_10_13_at_19_21_19.jpeg)
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/WhatsApp_Image_2023_10_13_at_19_21_20.jpeg)
இந்நிலையில் தற்போது தமிழக அரசு ’லியோ’ படத்தின் சிறப்புக் காட்சி தொடர்பாகச் சில அறிவுரைகளை வழங்கித் தெளிவுபடுத்தியுள்ளது. அதில், ஒரு நாளைக்கு 5 காட்சிகள் என மொத்தம் 6 நாள்களுக்கு அதாவது, 19-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை மட்டுமே அனுமதி. அனைத்து திரையரங்குகளிலும் ஒரே ஒரு சிறப்புக் காட்சி மட்டுமே திரையிட வேண்டும். காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை மட்டுமே காட்சிகள் திரையிடப்பட வேண்டும் எனவும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி அல்லது 8 மணிக்குச் சிறப்புக் காட்சிகள் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் விடுமுறை நாள்களிலும் 9 மணிக்குத்தான் முதல் காட்சி என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சிறப்புக் காட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், உரிய நடவடிக்கை எடுத்துக் கண்காணிக்கவும் சிறப்புக் குழு ஒன்றை அமைக்க உத்தரவிட்டுள்ளது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/63c8114d03f76.jpg)
அதுமட்டுமின்றி, இன்று சென்னை உயர் நீதிமன்றம், அதிகாலை 1 மணி காட்சி மற்றும் 4 மணி காட்சிகளைத் திரையிட்ட ரோஹிணி திரையரங்கின் மீதான வழக்கில் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அதன்படி, “அனுமதியின்றி ‘வாரிசு’, ‘துணிவு’, ‘பத்து தல’ படத்திற்குச் சிறப்புக் காட்சிகளைத் திரையிட்ட ரோஹிணி திரையரங்கிற்கு விதித்த அபராதம் செல்லும்” எனத் தீர்ப்பளித்துள்ளது. அனுமதியின்றி சிறப்புக் காட்சிகளைத் திரையிடும் திரையரங்குகள் மீது இனி சமரசமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்பது கோலிவுட் வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.