மும்பை: இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் விவகாரத்தில் இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இருந்து பிரதமர் மோடியின் நிலைப்பாடு மாறுபட்டிருப்பதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். மேலுல் இந்திய அரசு 100 சதவீதம் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பதாக அவர் நம்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சரத் பவார் கூறுகையில்,”வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியா எப்போதும் பாலஸ்தீன விவகாரத்தை ஆதரித்துள்ளது. ஆனால், நாங்கள் ஒரு போதும் தீவிரவாத தாக்குதல் நடத்தும் அமைப்புகளை ஆதரிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளது. ஆனால் பிரதமரின் நிலைப்பாடு நாங்கள் முற்றிலும் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்பதாக உள்ளது. அதற்கேற்ப பிரதமர் மோடி இஸ்ரேல் பிரதமருக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
இஸ்ரேல் – பாலஸ்தீனம் பிரச்சினை “தீவிரமானது மற்றும் உணர்வுப்பூர்மானது”. அதில், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட பிற முஸ்லிம் நாடுகளின் பார்வைகளை புறக்கணித்து விட முடியாது. அரசைத் தலைமையேற்று நடத்தும் ஒருவரும் அவரது அமைச்சரகமும் ஒரு விஷயத்தில் வேறு வேறு நிலைப்பாடு எடுப்பது இதுவே முதல் முறை” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாத குழு தாக்குதல் நடத்தியதற்கு அடுத்த நாள் தீவிரவாத தாக்குதலைக் கண்டித்திருந்த பிரதமர் மோடி, இஸ்ரேலுக்கு தனது ஆதரவினைத் தெரிவித்தும் இருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இஸ்ரேலில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் உள்ளன. இந்தக் கடினமான நேரத்தில் இஸ்ரேலுடன் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம்” என்று தெரிவித்திருந்தார்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வியாழக்கிழமை ஹமாஸ் நடத்திய தாக்குதலை பயங்கரவாத தாக்குதல் என்று விவரித்திருந்தது. என்றாலும் தனது நீண்டகால நிலைப்பாட்டையும் உறுதிப்படுத்தியிருந்தது. பாலஸ்தீனம், இறையாண்மை, சுதந்திரம் மற்றும் சாத்தியமான ஓர் அரசை உருவாக்க இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் வலியுறுத்தியுள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் போர் இன்று (சனிக்கிழமை) 8-வது நாளை எட்டியுள்ள நிலையில் இருதரப்பிலும் சேர்த்து 3000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.