உலகக்கோப்பையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் வங்கதேச அணியும் நியூசிலாந்து அணியும் நேற்று விளையாடின. இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் 246 ரன்களை சேஸ் செய்து அசத்தலான வெற்றியைப் பெற்றுள்ளது நியூசிலாந்து.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/IMG_20231013_WA0015.jpg)
காயத்தால் அவதிப்பட்டு வந்த நியூசிலாந்து அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன் பல மாதங்களுக்குப் பிறகு களமிறங்கியுள்ளார். உலகக் கோப்பையில் முதல் போட்டியில் விளையாடும் கேன் வில்லியம்சனுக்கு டாஸிலேயே வெற்றி கிடைத்தது. இது சென்னை என்பதால் ஆடுகளத்தின் தன்மையைப் புரிந்து கொள்ள பந்துவீச்சே சரியானதாக இருக்கும். அதைக் கணித்து பௌலிங்கைத் தேர்வு செய்த கேன் வில்லியம்சனுக்கு டாஸியிலேயே முதல் வெற்றி. இதையடுத்து வங்கதேச அணியின் தொடக்க வீரர்களாக லிட்டன் குமார் தாஸ் மற்றும் டான்ஸித் ஹசன் இருவரும் களத்திற்குள் வந்தனர். ட்ரெண்ட் போல்ட் வீசிய இன்னிங்ஸின் முதல் பந்திலேயே ஆட்டம் நியூசிலாந்துக்கு சாதகமானதாக மாறியது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/IMG_20231014_WA0044_1_.jpg)
லிட்டன் குமார் தாஸ் அடித்த பந்தை ஸ்கொயர் லெக் திசையில் நின்று கொண்டிருந்த மேட் ஹென்றி, ஷார்ப்பாக கேட்ச் பிடித்தார். முதல் பந்தே கோல்டன் டக்-அவுட் ஆகியதால் வங்கதேசத்துக்குத் தலைவலி ஆரம்பித்தது. அடுத்த விக்கெட்டுக்கு மெஹிடி ஹசன் மிராஸ் ஜோடி சேர்ந்து, பவுண்டரிகளை அடிக்கத் தொடங்கியிருந்தனர். ஆனால், நினைத்த காரியம் நடக்கவில்லை. இவர்களால் 7 ஓவர்கள் வரை மட்டுமே விளையாட முடிந்தது. நான்கு பவுண்டரிகளை அடித்த டான்ஸித் ஹசன் 16 ரன்களில் அவுட்டானார். லாக்கி ஃபெர்குஷன் வீசிய எட்டாவது ஓவரில் டான்ஸித் கேட்ச் கொடுத்தார்.
இவர் அவுட்டான போது அணியின் ஸ்கோர் 40 ஆக இருந்தது. ஃபீல்டிங்கில் சொல்லி வைத்து விக்கெட் எடுத்தது நியூசிலாந்து. எங்கெல்லாம் அடிப்பார்களோ, அங்கெல்லாம் கருஞ்சட்டைப் படையினரை நிறுத்தியிருந்தார் கேன் வில்லியம்சன். அடுத்த 12வது ஓவரில் லாக்கி ஃபெர்குஷன் வீசிய ஷார்ட் பாலை அடித்த மெஹிடி ஹசன் மிராஸ் தூக்கிவிட்டார். ஆனால், அங்கேயும் எல்லையைக் காக்கும் கருப்புசாமி ஒருவர் நின்று கொண்டிருக்க, பந்தைச் சரியாகப் பிடித்தார். இதனால் மெஹிடி ஹசன் மிராஸ், 30 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அவுட்டானார். அடுத்த ஓவரே ஷான்டோவும் ‘டாட்டா’ காட்டிவிட, வங்கதேச அணி 4 விக்கெட்டுகளை இழந்து 56 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/IMG_20231013_WA0070.jpg)
சேற்றில் சிக்கிய தேரைத் தூக்கிவிட வந்த யானைகளாக களத்திற்குள் காலடியை எடுத்து வைத்தனர், ஷகிப் அல் ஹசனும் முஷ்ஃபிகுர் ரஹீமும். இந்தக் கூட்டணி நியூசிலாந்து அணியின் பௌலிங்கைக் கொஞ்சம் திண்டாட வைத்தது. சான்ட்னர், கிளென் பிளிஃப்ஸ் என ஸ்பின்னர்களின் ஓவர்களிலும் மிரட்டிக் கொண்டிருந்தார் முஷ்ஃபிகுர் ரஹீம். இந்தக் கூட்டணியின் தெளிவான ஆட்டத்தின் மூலம் 21 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி, 100 ரன்களைக் கடந்தது. ஃபெர்குசன் வீசிய 28வது ஓவரில், பவுண்டரி அடித்து அரைசதத்தைக் கடந்தார், முஷ்ஃபிகுர் ரஹீம். இவரைத் தொடர்ந்து ஷகிப்பும் அதிரடியாக ஆடத் தொடங்கியிருந்தார். ஆனால், அந்த ஆட்டத்தையும் ஆர்ப்பரிப்பையும் மீண்டும் அமைதியாக்கினார், லாக்கி ஃபெர்குசன். ஷகிப் அடித்த பந்தை விக்கெட் கீப்பர் டாம் லாதம் பிடித்தார். ஷகிப் 51 பந்துகளில் 40 ரன்கள் எடுத்திருந்தார். இவர் அவுட்டான பிறகு, ஆட்டத்தில் மீண்டும் மந்தநிலை தொற்றிக்கொண்டது.
நியூசிலாந்து அணியின் பவர்ஃபுல் ஃபீல்டிங்கையும் பௌலிங்கையும், டிஃபென்ட் செய்து வந்த முஷ்ஃபிகுர் ரஹீமை மண்ணைக்கவ்வ வைத்தார் மேட் ஹென்றி. அவுட்டானதை அவரே நம்ப முடியாத அளவிற்கு, 36வது ஓவரில் மேட் ஹென்றி ஸ்டம்ப்பைத் தெறிக்கவிட்டார். முஷ்ஃபிகுர், 75 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளி்படுத்தியிருந்தார். இதற்கடுத்து வந்த ஹ்ரிடாய் 13 ரன்களும், தஸ்கின் அஹமத் 17 ரன்களும் எடுத்தனர். கடைசி சில ஓவர்களில் பவுண்டரியும், சிக்ஸரும் வர, 50 ஓவர்கள் முடிவில் 245 ரன்கள் எடுத்தது, வங்கதேச அணி. இதில் மஹ்மதுல்லா 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் ஃபீல்டிங் மற்றும் பௌலிங்கில் ஃபர்ஸ்ட் கிளாஸ் பெர்ஃபார்மன்சை கொடுத்து மிரட்டியிருந்தது, நியூசிலாந்து அணி.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/IMG_20231014_WA0024.jpg)
இதையடுத்து 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது, நியூசிலாந்து அணி. தொடக்க வீரர்களாக டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா விளையாட வந்தனர். முதல் 5 ஓவர்களை சிறப்பாகவே கையாண்டிருந்தது வங்கதேச அணி. இரண்டு ஓவர்களில் வெறும் 4 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தனர். மூன்றாவது ஓவரை வீசிய முஸ்தஃபிசூர் ரஹ்மான், ரவீந்திரா விக்கெட்டை எடுத்தார். அதிரடியாக இரண்டு பவுண்டரிகளை அடித்த அதே ஓவரில், 9 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதற்குப் பிறகு, ஆட்டம் கடந்த IND vs AUS மேட்ச்சைப் போல மாறும் என எதிர்பார்ப்பு இருந்தது. ஏனெனில், சேப்பாக்கத்தின் மண் அந்த மாதிரி. அடுத்ததாக கேன் வில்லியம்சன் வர ஆட்டத்தில் நிதானம் தென்பட்டது. 10 ஓவர்கள் முடிவில் 37 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தனர். ஆனால், இந்தப் பிட்ச்சில் பல முறை ஆடிய கான்வே ஓரளவுக்கு மேல் ஆட்டத்தை வேகப்படுத்தினார்.
சிங்கிள், இரண்டு என விளையாடிய இந்த ஜோடி 21வது ஓவரில் பிரிந்தது. பெரிய ஷாட்கள் அடித்து அட்டாக் செய்யாமல், இவர்கள் கடைப்பிடித்த நிதானம் மிகவும் அவசியமாகும். இதனால், நியூசிலாந்து அணியால் 20 ஓவர்கள் முடிவில் 92 ரன்கள் எடுக்க முடிந்தது. 21வது ஓவரில் ஷகிப் வீசிய பந்து நேராக கான்வே காலில் பட்டு, எல்.பி.டபிள்யு விக்கெட் வழங்கப்பட்டது. நியூசிலாந்து அணி ரிவ்யூ கேட்க, மூன்றாவது நடுவரும் அவுட் என தீர்ப்பு வழங்கினார்.
அடுத்து வந்த டேரில் மிட்செல், விக்கெட் விழுந்ததைக் கூட எண்ணத்தில் வைக்காமல் சிக்ஸர் ஒன்றைத் தூக்கிவிட்டார். இந்த பந்தைப் பிடிக்க முயன்று, மஹ்மதுல்லா கீழே விழுந்தார். இதே ஓவரின் முடிவில் நியூசிலாந்து அணியும் நூறு ரன்களைத் தொட்டது. அதுவரை, பந்தைத் தடுத்து ஆடிவந்த வில்லியம்சனும் வங்கதேசம் அணிக்கு வில்லனாக மாறி, சிக்ஸர் ஒன்றை அடித்தார். இவர் 29வது ஓவரில் 81 பந்துகளில் அரைசதம் அடித்தார். 32வது ஓவரில் நியூசிலாந்து அணியின் ஸ்கோர் 150 ஆக இருந்தது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/IMG_20231014_WA0033.jpg)
வில்லியம்சனின் பேட்டிங்கில் ஒரு தொய்வு தெரிந்தாலும், இந்த இருவரின் பார்ட்னர்ஷிப்பிலும் நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருந்தது. இந்நிலையில், சிக்ஸர் அடித்து அரைசதத்தைக் கடந்தார் டேரில் மிட்செல். 43 பந்துகளில் இதைச் செய்திருந்தார். அடுத்த சில ஓவர்களிலேயே இந்த பார்ட்னர்ஷிப்பில் நூறு ரன்கள் வந்திருந்தது. ஆனால், 39வது ஓவரின் போது கேன் வில்லியம்சன் காயம் காரணமாக பாதியிலேயே பெவிலியனுக்குத் திரும்பிவிட்டார்.
வில்லியம்சன் 107 பந்துகளில் 78 ரன்கள் எடுத்திருந்த போது, அணியின் ஸ்கோர் 200 ரன்களாக இருந்தது. அணியின் வெற்றிக்கு மிகப்பெரிய பங்களிப்பை அளித்துவிட்டு சென்றதால், அடுத்த பேட்ஸ்மன்களுக்கு வெற்றி இலக்கு இன்னும் சுலபமானது. இந்நிலையில், அடுத்த சில ஓவர்களில் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 43வது ஓவரில் டேரில் மிட்செல் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை ஃபினிஷிங் செய்தார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/IMG_20231014_WA0020.jpg)
42.5 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்து அற்புதமான வெற்றியைப் பெற்றது, நியூசிலாந்து அணி. அட்டகாசமான இன்னிங்ஸை வெளிப்படுத்திய டேரில் மிட்செல், 67 பந்துகளில் 89 ரன்களை எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார். இந்த வெற்றியைத் தொடர்ந்து புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது நியூசிலாந்து.