ஆந்திரா-தெலங்கானா இடையே நதிநீர்ப் பங்கீடு தொடர்பான `கிருஷ்ணா நதிநீர் தீர்ப்பாயத்தின்’ விதிமுறைகளுக்கு, அண்மையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
அதை முன்னிட்டு, ஹைதராபாத்தில் பா.ஜ.க சார்பில் விவசாயிகள் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர் கைலாஷ் சௌத்ரி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “மாநிலத்தில் தேசியவாத சிந்தனை கொண்ட அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும். இந்தியாவில் ‘பாரத் மாதா கி ஜெய்’ என்று கோஷமிட மாட்டோம் என்று கூறுபவர்கள், நரகத்தில் தள்ளப்படுவார்கள்.
நீங்கள் இந்தியாவில் வாழ விரும்பினால், ‘பாரத் மாதா கி ஜெய்’ என்று சொல்ல வேண்டும். இந்தியாவில் வசிக்கும் நீங்கள், ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று சொல்வீர்களா… ‘வந்தே மாதரம்’, ‘பாரத் மாதா கி ஜெய்’ என்று சொல்பவர்களுக்கு மட்டுமே நாட்டில் இடம் உண்டு.
`பாரத் மாதா கி ஜெய்’ என்று சொல்லாத, இந்துஸ்தான் மற்றும் பாரதத்தின்மீது நம்பிக்கை இல்லாத, ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ மீது நம்பிக்கை வைத்திருக்கும் ஒருவர் இருந்தால், அவர் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும். இங்கு தேவையில்லை… அதனால்தான் நான் சொல்கிறேன். நேஷனலிஸ்ட் ஐடியாலஜி தேசத்திற்கு மிகவும் முக்கியம், கூட்டு முயற்சிகளால் நாட்டை பலப்படுத்த வேண்டும்” என்றார்.
எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு `இந்தியா’ என்று பெயர் சூட்டியதைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், “காங்கிரஸ் மக்கள் முதலில் மகாத்மா காந்தியின் பெயரைத் திருடினார்கள். அதற்கு முன் அவர்கள் நாட்டிற்கு சுதந்திரத்தை அடைய முதலில் உருவாக்கப்பட்ட `காங்கிரஸ்’ என்ற பெயரை எடுத்துக் கொண்டனர்” என்று குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், “பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் விவசாயிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார். முந்தைய UPA ஆட்சியுடன் ஒப்பிடும்போது இந்த ஆட்சியில் விவசாய பட்ஜெட் உயர்வு, பி.எம் கிசான் சமன் நிதி திட்டம், நானோ யூரியா உரம் மற்றும் விவசாய உள்கட்டமைப்பு மேம்படுத்தல் உள்ளிட்ட விவசாயிகளுக்கு ஆதரவான நடவடிக்கைகள் அதிகமாக இருக்கின்றன. நிதி வளர்ச்சியின் பலன்கள் சாதாரண மக்களைச் சென்றடைகின்றன. மோடி ஆட்சியில் நாட்டில் நெடுஞ்சாலைகள், உள்கட்டமைப்பு மற்றும் பிற துறைகளில் விரைவான முன்னேற்றம் காணப்படுகிறது. தெலங்கானாவில் தேசியவாத அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும்” என்றார்.