திருவனந்தபுரம்: கேரளாவின் பல பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கும் சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம்ஆரஞ்சு எச்சரிக்கை, 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம், எர்ணாகுளம் உள்ளிட்ட தெற்கு மாவட்டங்களில் சனிக்கிழமை முதல் கனமழை பெய்துவருகிறது. இதனால், அம்மாவட்டங்களில் உள்ள தாழ்வான பகுதிகள், சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சிலபகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக திருவனந்தபுரம் மாவட்டம் அதிக அளவில்வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அம்மாவட்டத்தின் கழகூடம் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளதால், அப்பகுதி மக்கள் அங்கிருந்துமிதவை படகு மூலம் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவசர கூட்டம்: மேலும் பல இடங்களில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, அமைச்சர்கள் நிலையிலான அவசர கூட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகுமாநில கல்வி அமைச்சர் சிவன்குட்டி செய்தியாளர்களிடம் கூறும்போது, “திருவனந்தபுரத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர்சூழ்ந்துள்ளது. வெள்ளநீரைவெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள்போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. வெள்ளத்தால்பாதிக்கப்பட் டோருக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்” என்றார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாநில அமைச்சர்கள் வி.சிவன் குட்டி மற்றும் கே.ராஜன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
ஒரே நாளில் 100 மி.மீ. மழை: இதுகுறித்து மாநில வருவாய் துறை அமைச்சர் கே.ராஜன் கூறும்போது, “திருவனந்தபுரத்தில் ஒரே நாளில் 100 மி.மீ.க்கும் அதிகமாக மழை பதிவாகி உள்ளது.சர்வதேச விமான நிலைய பகுதியில் இதுபோல 2 மடங்கு மழை பதிவாகி உள்ளது. இதனால்தான் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் 17 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 572 பேர் தங்கி உள்ளனர்” என்றார்.இதனிடையே, திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும்ஆலப்புழா ஆகிய 4 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு (மிக கனமழை) எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும்கேரளாவின் இதர 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் (கனமழை) எச்சரிக்கை விடுத்துள்ளது.