காயம்பட்ட சிங்கத்தோட மூச்சுக்காத்து… இலங்கையை சுருட்டிய ஆஸ்திரேலியா – முதல் வெற்றியா?

AUS vs SL: ஒருநாள் கிரிக்கெட்டுக்கான ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை 2023 தொடரின் 14ஆவது லீக் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. லக்னோவில் நடைபெறும் இந்த போட்டியில் ஆஸ்திரேலியா – இலங்கை அணிகள் மோதின. இரு அணிகளும் நடப்பு தொடரில் இன்னும் வெற்றியை பதிவு செய்திராத நிலையில் முதல் வெற்றியை யார் பெறப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. 

இந்த போட்டியின் டாஸை வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணி தங்களின் பிளேயிங் லெவனை மாற்றாத நிலையில், இலங்கையில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிய ஷனகாவுக்கு பதில் குசல் மெண்டீஸ் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 

அந்த வகையில், இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக குசல் பெரேரா, பதும் நிசங்கா ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடி ஆஸ்திரேலியாவின் தொடக்க கட்ட பந்துவீச்சாளர்களின் பொறுமையை கடுமையாக சோதித்தது. குறிப்பாக, ஸ்டார்க், ஹேசில்வுட், கம்மின்ஸ் ஆகியோரை ஓப்பனர்கள் இருவருமே துணிந்து தாக்கினர். இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். இவர்களை அவுட்டாக்க கம்மின்ஸ் மொத்தம் 6 பவுலிங் ஆப்ஷன்களையும் பயன்படுத்தினார். 

ஆனால், அவர் கம்மின்ஸின் கையாலேயே முதல் விக்கெட்டை பறிகொடுத்தனர். இந்த ஜோடி 125 ரன்களை எடுத்திருந்த சூழலில், பதும் நிசங்கா 61 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, அடுத்த சில ஓவர்களிலேயே குசால் பெரேரா 78 ரன்களில் கம்மின்ஸ் பந்துவீச்சிலேயே ஆட்டமிழந்தார். அதில் இருந்து இலங்கையின் சரிவு தொடங்கியது எனலாம். 

கேப்டன் குசால் மெண்டிஸ், சதீரா சமரவிக்ரம ஆகியோர் ஸாம்பா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து, சற்று நேரம் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது. சுமார் அரைமணி நேரத்திற்கு மழை நின்றதால் போட்டி மீண்டும் தொடங்கியது. மழைக்கு பின் முதல் பந்திலேயே டி சில்வை ஸ்டார்க் விக்கெட் எடுத்தார். அதன் பின், சில ஓவர்களில் வெல்லலகே ரன்-அவுட்டாக அசலங்கா மட்டுமே நிலைத்துநின்று விளையாடினார். டெயிலெண்டர்களை ஸாம்பா, ஸ்டார்க் ஆகியோர் விக்கெட் எடுக்க கடைசி விக்கெட்டாக அசலாங்காவும் 25 ரன்களில் மேக்ஸ்வெலிடம் அவுட்டானார். அதன்மூலம், 43.3 ஓவர்களில் இலங்கை 209 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. 

ஆஸ்திரேலிய அணி பந்துவீச்தில் ஸாம்பா 4, ஸ்டார்க், கம்மின்ஸ் தலா 2, மேக்ஸ்வெல் 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஒரு கட்டத்தில் 125 ரன்களுக்கு 1 விக்கெட், 157 ரன்களுக்கு 2 விக்கெட் என ஸ்கோர் இருந்த நிலையில், 209 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி இலங்கை அதிர்ச்சியளித்தது. அதாவது, 52 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இலங்கை பேட்டர்கள் இழந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.