திருமலை: திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவ விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. முதல் நாளான நேற்றிரவு பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நேற்றிரவு வெகு சிறப்பாகவும், கோலாகலமாகவும் தொடங்கியது. இந்த ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2 பிரம்மோற்சவ விழாக்கள் நடத்தப்படுகிறது. இதில் ஏற்கனவே கடந்த மாதம் 18ம் தேதி முதல் 26-ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து நேற்று முதல் வரும் 23-ம் தேதி வரை 9 நாட்களுக்கு இந்த தசராவில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவினை திருமலை திருப்பதி தேவஸ்தானம் மிக பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, நேற்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் பெரிய சேஷ வாகனத்தில் 4 மாட வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வாகன சேவையின் முன், யானை, குதிரை, காளை ஆகிய பரிவட்டங்கள் செல்ல, இவர்களின் பின்னால், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நடனக் குழுவினர் நடனமாடியபடி உற்சாகமாய் சென்றனர். மேலும், இந்த வாகன சேவையில் ஜீயர் குழுவினர், தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.