இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 498ஏ (கணவர் அல்லது உறவினர்களால் பெண்ணுக்குக் கொடுமை) என்ற தண்டனைக்குரிய குற்றங்களைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை, காவல்துறை இறுதி அறிக்கை தாக்கல் செய்யாத நிலையில் மேற்படிப்புக்காக ஆஸ்திரேலியா செல்ல கேரள உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/IMAGE_1642578420.jpg)
பெண்ணுக்குக் கொடுமை செய்த குற்றத்தில் சரணடைந்த ஒருவர் ஜெயிலில் அடைக்கப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். அவர் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கின் இறுதி அறிக்கையை இன்னும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.
இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர், தான் அனைத்து விசாரணைக்கும் ஒத்துழைத்ததாகவும், இனியும் ஒத்துழைப்பதாகவும், தற்போது தனக்கு ஆஸ்திரேலியாவில் மேற்படிப்பு படிக்க சீட் கிடைத்துள்ளதால் தான் அங்கு செல்ல அனுமதி வேண்டும் எனவும் முதலில் கேரள கீழமை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்ற நீதிபதிகள், அந்த நபரின் மனுவை தள்ளுபடி செய்தனர். இதனால் அவர் கேரள உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அப்போது இந்த வழக்கையும், விசாரணைக்கு அவர் ஒத்துழைத்த விதத்தையும் ஆராய்ந்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் அவர் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கியுள்ளனர். அந்த நபர் விசாரணைக்கு ஒத்துழைத்துள்ளதாகவும் விசாரணையின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படாத காரணத்தால் படிப்புக்காக வெளிநாடு செல்வதற்கான அவரது உரிமையை பறிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/39411_thumb.jpg)
மேலும், ’சரணடைந்த நாளில் இருந்து அவர் வெளிப்படையாக, மற்றும் எந்த பாதிப்பும் இல்லாமல் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்து வருகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதேபோல் நீதிமன்றம் கூறிய அனைத்து விதிமுறைகளையும் முறையாகக் கடைப்பிடித்துள்ளார். எனவே அவரின் உரிமையை பறிக்க வேண்டிய அவசியமில்லை. அதனால் ராயல் மெல்போர்ன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற அவர் ஆஸ்திரேலியா செல்லலாம். அங்கு அவர் வசிக்கும் முகவரி மற்றும் இதர விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்’ என நீதிபதிகள் கூறியுள்ளனர்.