புதுடெல்லி: இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வரும் நிலையில், இந்தியா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி நிலைமையைச் சரிசெய்ய உதவ வேண்டும் என பிரபல இஸ்ரேலிய எழுத்தாளர் யுவல் நோஹ் ஹராரி கருத்து தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் நாட்டின் மீது அக்டோபர் 7-ம் தேதியன்று பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழு திடீர் தாக்குதலைத் நடத்தியது. அதைத் தொடர்ந்து இஸ்ரேலும் தொடர்ந்து தன்னுடைய எதிர்த் தாக்குதலை நடந்தி வருகிறது. இந்த மோதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த நிலையில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் உலக நாடுகள் இரண்டாகப் பிரிந்து கிடக்கின்றன.
பாலஸ்தீனத்துக்குச் சீனா, ஈரான், சிரியா, லெபனான் முதலான நாடுகளும், இஸ்ரேலுக்கு இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் ஆதரவளித்திருக்கின்றன. உலக நாடுகள் இந்தப் போரை உற்று நோக்கிக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியப் பிரதமர் மோடி, தன்னுடைய எக்ஸ் தளத்தில், “இஸ்ரேலில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. எங்கள் பிரார்த்தனைகள் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காகவே இருக்கின்றன. இந்தக் கடினமான நேரத்தில் இஸ்ரேலின் பக்கம் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம்’’ என்று இஸ்ரேலுக்கு ஆதரவாகப் பதிவிட்டிருந்தார். இதையடுத்து போரும் உக்கிரமடைய ஆரம்பித்திருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் தண்ணீர், உணவு கூட இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இஸ்ரேல் – ஹ மாஸ் போருக்கு மத்தியில், இஸ்ரேலிய எழுத்தாளரும் வரலாற்று ஆசிரியருமான யுவல் நோஹ் ஹராரி என்டிடிடி-க்கு பேட்டியளித்தார். அதில் அவர், “நான் ஒரு மதத்தின் மீது மட்டும் கவனம் செலுத்தவில்லை. அவர்களின் (ஹமாஸின்) கவனம் இந்த உலகில் உள்ள மனிதர்கள் படும் துன்பங்களில் இல்லை, அவர்களின் கவனம் வேறொரு உலகத்தில் உள்ளது .இதுதான் பிரச்சினை. ஹமாஸ் இந்தத் தாக்குதலின் மூலம் அமைதியான சூழலை ஏற்படுத்த முயற்சிக்கவில்லை. லட்சக்கணக்கான மக்களின் மனதில் பயங்கரமான வெறுப்பு, வேதனையின் காட்சிகளை விதைப்பதன் மூலம் ஒருபோதும் அமைதி ஏற்படாது.
இதுபோன்ற மதவெறி, மனிதகுலத்துக்கு பயங்கரமானது. பாலஸ்தீன தாக்குதலை ‘பெருமைமிக்க நடவடிக்கை’ என்றும் ‘பெரிய வெற்றி; என்றும் ஈரான் பாராட்டியது. அந்த நாடு இஸ்ரேலை அங்கீகரிக்கவில்லை. இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை ஈரான் எடுத்தது. ரஷ்யா, சீனாவைப் போல் அல்லாமல், இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இந்தியா, ஈரான் உட்பட பல நாடுகளுடன் நல்ல உறவைக் கொண்டிருக்கிறது. எனவே, இந்தியா இந்த விவகாரத்தில் ஈரானிடம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, மோதல் தீவிரமடைவதைத் தடுக்க முடியும் என நம்புகிறோம்” என்று அவர் தெரிவித்திருக்கிறார்.