த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகிவரும் `தலைவர் 170′ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடந்து வருகிறது.
இதனால், ரசிகர்கள் தினமும் ரஜினியைப் பார்க்க அங்கு குவிந்துவிடுகின்றனர். ரஜினியும் தன் ரசிகர்களுக்காக காரில் இருந்து கை காட்டியபடியே ஷூட்டுங் ஸ்பாட்டிற்கு வருவதும் போவதுமாக இருக்கிறார். 1977-ல் எஸ்.பி முத்துராமன் இயக்கிய ‘புவனா ஒரு கேள்விக்குறி’ படத்தின் படப்பிடிப்பு இதே தூத்துக்குடியில்தான் நடந்தது. அதன்பிறகு 46 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி, படப்பிடிப்பிற்காக தூத்துக்குடி வந்துள்ளார். அதுமட்டுமின்றி தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து ரஜினி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதற்குப் பிறகு ரஜினி, இப்படப்பிடிப்பிற்காக தூத்துக்குடி வந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Superstar #Rajinikanth gets huge reception on the sets of #Thalaivar170 in Kerala.pic.twitter.com/gxA1ojSSIN
— Manobala Vijayabalan (@ManobalaV) October 7, 2023
இதற்கிடையில் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த சர்ச்சை மற்றும் `ஜெயிலர்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய்யின் `லியோ’ படத்திற்கான எதிர்பார்ப்புகள் எனத் தமிழ் சினிமா பரபரப்பாகவே இருக்கிறது. இது இரண்டு தரப்பு ரசிகர்களிடமும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ‘லியோ’ படம் குறித்தும் தூத்துக்குடி குறித்தும் பேசியுள்ளார். “இந்த வாரம் வெளியாகவுள்ள ‘லியோ’ படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும். அதற்கு என் வாழ்த்துகள். தூத்துக்குடிக்கு முதன்முதலில் ‘புவனா ஒரு கேள்விக்குறி’ படத்தின் படப்பிடிப்பிற்காக வந்தேன். 46 வருடங்களுக்குப் பிறகு இப்போது மீண்டும் தூத்துக்குடிக்கு வந்திருக்கிறேன். நிறைய ரசிகர்கள் என்னைப் பார்க்க வருகிறார்கள். அவர்களுடன் சேர்ந்து செல்ஃபி எடுக்க முடியவில்லை என்று வருத்தப்படுகிறேன்” என்று கூறினார்.
த.செ.ஞானவேலின் படத்தை முடித்தக் கையோடு, அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார்.