கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நாதன் குடியிருப்பு, பிரமந்தனாறு, உழவனூர் ஆகிய பகுதிகளில் ஜம்போ கச்சான் செய்கைக்கு சிறந்த இடமாக தெரிவு செய்யப்பட்டிருந்தது.
ஆயினும், இவ்வருடம் ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக குறித்த பகுதிகளில் ஜம்போ கச்சான் அறுவடையில் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக சில விவசாயிகள் ஜம்போ கச்சான் அறுவடை செய்யாது கைவிட்டுள்ள நிலையிலும், தற்பொழுது நான்கு மாதம் கடந்த நிலையில் அறுவடை செய்ய முடியாத நிலை காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
பல இலட்சம் ரூபாய் செலவழித்து ஜம்போ கச்சான் செய்கையில ஈடுபட்ட விவசாயிகள் இவ்வருடம் விற்பனை செய்ய முடியாத நிலையில் காணப்படுவதாகவும் தெரிவித்தனர்.
இதன் காரணமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதிக்கப்பட்ட தமக்கு நஷ்ட ஈட்டினை பெற்றுத்தர வேண்டுமென கோரிக்கையொன்றை விடுத்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அவர்களை தொடர்பு கொண்டபோது : காலநிலை மற்றும் சிலருக்கு காலம் பிந்திய விதைப்பும் இவ்வருட ஜம்போ கச்சான் விளைச்சலின் வீழ்ச்சிக்கு காரணமாக இருப்பதுடன், வருகின்ற பெரும்போகத்திற்கு விவசாயிகளுக்கு பயிற்சிகளை வழங்க திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார்.