தன்பாலின திருமண அங்கீகாரம்: உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?! | தீர்ப்பு விவரங்கள்

தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப் படாததால், அவர்களுக்கான பல உரிமைகள் மறுக்கப்படுவதால், தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் அங்கீகரிக்கப்படவேண்டும் வேண்டும் என்று பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதையடுத்து, இது தொடர்பான மனுக்களை கடந்த ஏப்ரல் 18-ம் தேதி விசாரிக்கத் தொடங்கிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் கொண்ட பேர் கொண்ட அமர்வு, தொடர்ந்து 10 நாள்கள் விசாரணை நடத்தியது.

தன்பாலின உறவு

இந்த விசாரணையில் அறிக்கை தாக்கல் செய்த மத்திய அரசு, “தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்குவது சரியான நடவடிக்கையாக இருக்காது. இதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று கோருவது நகர்ப்புற மேல்தட்டுப் பார்வை. ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம், அஸ்ஸாம் என ஏழு மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. மேலும், தன்பாலின ஈர்ப்பாளர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண மத்திய அமைச்சரவை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்படும்” என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

அதைத்தொடர்ந்து, கடந்த மே மாதம் 11-ம் தேதி இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டது. இவ்வாறான சூழலில், அக்டோபர் 17-ம் தேதியன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்ற தகவல் வெளியானது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு கூடியதும், தலைமை நீதிபதி சந்திரசூட் தீர்ப்பை வாசித்தார்,

உச்ச நீதிமன்றம்

“என்னுடையது உட்பட, நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், ரவீந்திர பேட், நரசிம்ஹா என நான்கு தீர்ப்புகள் இருக்கின்றன. நீதிமன்றத்தால் ஒரு சட்டத்தை உருவாக்க முடியாது. ஆனால், அதன் சரத்துகளை மறு ஆய்வு செய்ய முடியும். குடிமக்களின் அடிப்படை உரிமைகளை நீதிமன்றம் பாதுகாக்க வேண்டும் என்று அரசியலமைப்பு கோருகிறது. அதற்கான வழிகாட்டுதல்களை நீதிமன்றம் வழங்கலாம். தன்பாலின ஈர்ப்பாளர்கள் என்பது நகர்ப்புற மேல்தட்டு மக்களின் கருத்து அல்ல. சரளமாக ஆங்கிலம் பேசுபவர்கள் மட்டுமல்ல, கிராமத்தில் விவசாய வேலை செய்யும் ஒரு பெண் கூட தன்னை தன்பாலின ஈர்ப்பாளர் என்று கூறலாம். எனவே, தன்பாலின ஈர்ப்பாளர்கள் நகர்ப்புறங்களில் மேல்தட்டு மக்களில் மட்டுமே இருக்கிறார்கள் என்று கூறுவது, அவர்களை அழிப்பதாகும்.

அதேபோல், நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் அனைவரையும் மேல்தட்டு மக்கள் என்று கூற முடியாது. ஏனெனில், தன்பாலின ஈர்ப்பு என்பது ஒருவருடைய சாதி, வர்க்கம் அல்லது சமூக-பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல் இருக்கலாம். திருமணத்தை நிலையான, மாறாத அமைப்பு என்று கூறுவது தவறானது. சட்டங்களால் திருமணத்தில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. எனவே, இந்த விவகாரத்திலிருந்து அரசு விலகுவது என்பது பாதிக்கப்படக்கூடிய தரப்பினருக்குப் பாதுகாப்பற்றதாக இருக்கும். அதோடு, தனிப்பட்ட இடத்தில அரங்கேறும் அனைத்து அந்தரங்க நடவடிக்கைகளும் அரசின் ஆய்வுக்கு அப்பாற்பட்டவை எனக் கூற முடியாது.

சந்திரசூட் தலைமையிலான அமர்வு

இந்த மனுக்கள் திருமணச் சட்டத்தின் பிரிவு 4-ஐ உள்ளடக்கியதாக இருப்பதால், இது அரசியலமைப்புக்கு முரணானது என்று இந்த நீதிமன்றம் கருதினால், ஒன்று அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் அல்லது அதனை ஆய்வுசெய்ய வேண்டும். ஒருவேளை சிறப்பு திருமணச் சட்டம் ரத்து செய்யப்பட்டால், அது நாட்டை சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்துக்கு அழைத்துச் செல்லும். மாறாக, இதனை ஆய்வு செய்வது நாடாளுமன்றத்தின் வேலையைச் செய்வதாக அமைந்துவிடும். எனேவ, சிறப்பு திருமணச் சட்டத்தில் மாற்றம் வேண்டுமா என்பதை நாடாளுமன்றமே முடிவு செய்ய வேண்டும்.

மேலும், இதில் ஒருவர் தன்னுடைய துணையைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமையும் அடங்கும். அதை அங்கீகரிக்கத் தவறினால், அவர்களுக்கு எதிராகப் பாகுபாடு ஏற்படும். அவர்களுக்கான, உரிமைகள் குறித்து ஆராய மத்திய அரசு ஒரு குழுவை அமைக்கும் என்று சொலிசிட்டர் ஜெனரல் கூறியிருக்கிறார். மேலும், அவர்களின் உறவில் அவர்கள் சுதந்திரமாக இருக்க அங்கீகாரம் தேவை என்பதை மறுக்க முடியாது. ஒருவேளை, இது அங்கீகரிக்கப்படவில்லை என்றால், மறைமுகமாக அரசு அவர்களின் சுதந்திரத்தை மீறலாம்.

தன்பாலின உறவு

ஒருவர் தன்னுடைய வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை என்பது, சுதந்திரமாக வாழ்தலுக்கான அரசியலமைப்பு பிரிவு 21-ன் கீழ் வருகிறது. எனவே, தன்பாலின ஈர்ப்பாளர்கள் உட்பட அனைவரும் தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க உரிமை உண்டு. ஒரு திருநங்கை பாலின உறவில் இருக்கிறார் என்றால் அத்தகைய திருமணம் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. எனவே, தன்பாலின ஈர்ப்பாளர்களுக்குப் பாகுபாடு காட்ட முடியாது என்பதை இந்த நீதிமன்றம் உறுதிப்படுத்துகிறது. பிற பாலின தம்பதிகளுக்கு வழங்கப்படும் உரிமைகள் தன்பாலின ஈர்ப்பாளர் தம்பதிகளுக்கு மறுக்கப்படுவது அவர்களின் அடிப்படை உரிமையை மீறுவதாகும்.

என்றாலும், சிறப்பு திருமண சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டுமா என்பதை நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். ” என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து, தன்பாலின ஈர்ப்பாளர்கள் குழந்தைகளைத் தத்தெடுக்கும் உரிமை குறித்து பேசிய சந்திரசூட், “குழந்தை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம் திருமணமாகாத தம்பதிகள் தத்தெடுப்பதைத் தடுக்காது. அவ்வாறு தடுப்பது, குழந்தை நலனுக்கானது என்பதை மத்திய அரசு நிருபிக்கவில்லை. இதன்படி, திருமணமாக ஜோடிகள் தத்தெடுப்பதில் Central Adoption Resource Authority (CARA) தனது அதிகாரத்தை மீறியிருக்கிறது. மேலும், திருமணமாகாத தம்பதிகள் தங்களின் உறவில் அக்கறை காட்டுவதில்லை என்று கருத முடியாது. அதுமட்டுமல்லாமல், திருமணமான ஆண், பெண் தம்பதிகள் மட்டுமே குழந்தைகளைப் பார்த்துக்கொள்வார்கள் என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை. அந்த தம்பதிகள் மட்டுமே நல்ல பெற்றோராக இருக்க முடியும் என்று சட்டத்தால் கருத முடியாது. எனவே, CARA-ன் ஒழுங்குமுறை 5(3) தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு பாகுபாடு காட்டுகிறது. இது, தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு எதிரான பாகுபாட்டை வலுப்படுத்தும் விளைவைக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு எதிராகத் தத்தெடுப்பு விதிமுறைகள் அரசியலமைப்பை மீறுகிறது” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.