நீதிமன்றம் உத்தரவிட்டால் 'லியோ' அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்படும்: அமைச்சர் ரகுபதி

சென்னை: நீதிமன்றம் உத்தரவிட்டால் ‘லியோ’ அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

“நடிகர் விஜயைப் பார்த்து ஆளும் திமுக அரசு பயப்படுகின்றது. அதனாலேயே அவரது லியோ படத்துகு அதிகப்படியான கட்டுப்பாடுகளை திமுக அரசு விதித்துள்ளது” என முன்னாள் அமைச்சரும் அதிமுக முக்கியப் பிரமுகருமான கடம்பூர் ராஜூ தெரிவித்திருந்தார். திரைத்துறையை திமுக அரசு முடக்குவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த சட்ட அமைச்சர் ரகுபதி, “திரையுலகம் திமுக அரசின் நட்பு உலகம். திரைத்துறையை திமுக அரசு ஒருபோதும் முடக்காது. திமுக அரசினால்தான் திரைத்துறை செழிப்பாக இருக்கிறது என்பதே உண்மை. நலிந்த தயாரிப்பாளர்களைக் கூட திமுக அரசு ஊக்குவிக்கிறது. சினிமா விவகாரத்தில் அரசு எப்போதும் தலையிட்டதே இல்லை. லியோ சர்ச்சையைப் பொறுத்தவரை நீதிமன்றம் உத்தரவிட்டால் அதிகாலை 4 மணி காட்சிக்கு அரசு அனுமதியளிக்கும்” என்றார்,

லோகேஷ் கனகராஜ் இயக்கதில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் நாளை மறுநாள் (அக்டோபர் 19-ஆம் தேதி) வெளியாக உள்ளது.

முன்னதாக, படக்குழு தரப்பிலிருந்து ’லியோ’ படத்தின் முதல் காட்சியை, அக். 19-ம் தேதி அதிகாலை 4 மற்றும் 7 மணிக்கும், 20-ம் தேதியில் இருந்து 24 -ம் தேதி வரை காலை 7 மணிக்கும் சிறப்புக் காட்சிகள் திரையிட அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

தமிழக அரசு ’லியோ’ படத்தின் சிறப்புக் காட்சி தொடர்பாக சில அறிவுரைகளை வழங்கியது. அதன்படி 19-ம் தேதி முதல் 24ஆம் தேதிவரை அதிகபட்சம் 1 நாளுக்கு 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கியது. அரசு உத்தரவில், ’அனைத்து திரையரங்குகளிலும் ஒரே ஒரு சிறப்புக் காட்சி மட்டுமே திரையிட வேண்டும் என்ற உத்தரவின்படி காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, லியோ படத்தின் ரசிகர்களுக்கான சிறப்புக் காட்சியை காலை 4 மணிக்கு திரையிட அனுமதிக்க வேண்டும். அதேபோல் காலை 9 மணி என்பதை 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும் எனக் கோரி படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. லியோ திரைப்படத்துக்கு அதிகாலை 4 மணி காட்சியை திரையிட அனுமதி அளிப்பதில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் உள்ளன என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்தது.

இந்தச் சூழலில், நீதிமன்றம் உத்தரவிட்டால் ‘லியோ’ 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.