`பில்லா டு கங்குவா வரை!'- அசுர உழைப்பு; பிரமாண்ட செட்கள்; மிலன் குறித்து ஒளிப்பதிவாளர் வெற்றி

கலை இயக்குநர் மிலன், ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு நடக்கும் அஜர்பைஜானில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இயக்குநர் சிவாவின் கூட்டணியில் ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விஸ்வாசம்’, ‘அண்ணாத்த’யில் இருந்து இப்போது ‘கங்குவா’ வரை கலை இயக்குநராக வேலை செய்தவர் மிலன். அவரது மறைவு குறித்து கனத்த இதயத்துடன் நினைவுகளை பகிர்கிறார் ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிசாமி.

மிலன்,

”மிலன் ஃபெர்ணான்டஸுக்கும் எனக்கும் கிட்டத்தட்ட 22 வருஷ நட்பு. அப்போ அவர் சாபுசிரில் சாரோட உதவியாளராகத்தான் இருந்தார். அந்த சமயத்தில் இருந்தே அவர் எனக்குப் பழக்கமானார். ‘இயற்கை’ படத்துல நான் அசோஷியேட் ஒளிப்பதிவாளர். அவர் உதவி கலை இயக்குநர். அப்போல இருந்து இப்போ வரை நெருங்கிய நண்பர்களா இருக்கோம். மிகப்பெரிய அறிவாற்றல் நிரம்பியவர் அவர். அவரது இன்ஜினீயரிங் அறிவு, கற்பனைத் திறன் எல்லாம் வியக்க வைக்கும். மிலனின் செட்டுக்கள் ஒவ்வொண்ணுமே ஒளிப்பதிவாளர், இயக்குநரின் கண்ணோட்டத்தில் அமைஞ்சிருப்பது ஆச்சர்யம்.

சூர்யாவுடன் மிலன்

அவரோட செட்டுல கண்ணை மூடிக்கிட்டு எந்த கோணத்தில் படமாக்கினாலும், எதோ ஒரு சுவாரஸ்யமான எலமெனட்டும், ஃபிரேமுக்கு தேவையான விஷயங்களும் அமைஞ்சிடும். சின்ன வயசுலயே அவங்க அப்பா தவறினதால, மிலனின் குடும்பம் வறுமை சூழலால பெருசா அவர் படிக்கல. எட்டாவது வகுப்பு வரை தான் படிச்சிருக்கார். ஆனா, ‘பில்லா’வில் தொடங்கி, ‘கங்குவா’ வரை அவரோட கலை இயக்கத்தை பார்த்தால் பெரிய பெரிய காலேஜ்ல படிச்சிட்டு வந்தவரோட வேலை போலத் தெரியும்.

இன்னொரு விஷயம். அவர் அப்பழுக்கற்ற நேர்மையாளர். ஒரு ஐந்து பைசாக்கூட அடுத்தவங்களோட பணத்துக்கு ஆசைப்படாதவர். எல்லாரோடவும் நெருக்கமான அன்பைப் பொழியக்கூடியவர். செட் வேலையின் போது, அவர் மத்தவங்களுக்கு இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுத்துட்டு போகாமல், எல்லா வேலைகளையும் அவரே இழுத்துப் போட்டு பண்ணுவார்.

செட் வொர்க் நடக்கும் போது அவரைப் பார்க்கறவங்க ஆச்சரியப்படுவாங்க. அழுக்கான உடைகளும், முகமுமா ரொம்ப தீவிரமா வேலை செய்திட்டு இருப்பார். விடிய விடிய தூங்காமல் செட் வொர்க்கில் இருப்பார். மறுநாள் காலையில் இயக்குநர் வந்து பார்த்து, ‘செட் ஓகே’னு சொன்ன பிறகுதான் தூங்குவதற்கே செல்வார். அவரோட வேலை செய்த ஒரு ஒளிப்பதிவாளரோ, இயக்குநரோ அல்லது தயாரிப்பு நிறுவனமோ அவரை ஒரு படத்தோடு விட்டுட மாட்டாங்க. தொடர்ந்து அவரோட படம் பண்ணனும்னுதான் ஆசைப்படுவாங்க. ரொம்ப திறமையானவர். அதிலும் எங்களோட ‘கங்குவா’ படத்தை பொறுத்தவரைக்கும் நிச்சயமா ஒரு தேசிய விருது வாங்கக்கூடிய அளவுக்கு ஒரு அற்புதமான கலையை கொடுத்திருக்கார். ‘கங்குவா’விற்காக நிறைய செட்டுக்கள் போட்டிருக்கோம். ஒவ்வொரு செட்டுமே எல்லோரையும் பிரமிக்க வச்சிருக்கு. இப்பவும் சென்னையில் பிரமாண்டமான செட் அமைச்சிட்டு இருந்தார். அதோட வேலைகள் இப்பவும் நடந்துட்டு இருக்கு. ‘கங்குவா’வில் உள்ள அத்தனை செட்களும் உலகத்தரமான வடிவத்துல இந்த படத்துக்காக அவர் கொடுத்திருக்கார்.

ஒளிப்பதிவாளர் வெற்றி

இந்த படத்துக்காக மிலனுக்கு நிச்சயமா மிகப்பெரிய அங்கீகாரமும், மிகப்பெரிய விருதுகளும் சேரணும்னு விரும்பினோம். உறுதியா நம்பினோம். இறைவன் இவ்வளவு சீக்கிரமா அவர் உயிரை எடுத்துக்குவார்னு நினைச்சே பார்க்கல. அவர் இல்லாத படப்பிடிப்பு தளத்தை எங்களால கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியல. அப்படி ஒரு அசுர உழைப்பாளி. அவர் இறந்துட்டார்னு விஷயம் கேள்விப்பட்டதும் டீமில் உள்ள அத்தனை பேரும் அழுதுட்டோம். எங்க குடும்பத்துல ஒருத்தரா இருந்தார். இப்ப எங்க குடும்பத்துல ஒருத்தரை இழந்துட்டோம்.” என வேதனைப்பட்டார் ஒளிப்பதிவாளர் வெற்றி.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.