ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை ராணுவ வீரர்கள் நேற்று முறியடித்தனர். இதில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
தீவிரவாதிகள் ஊடுருவல் தொடர்பாக குப்வாரா போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், குப்வாரா மாவட்டத்தின் மச்சில் செக்டார் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் ராணுவ வீரர்கள் நேற்று அதிகாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தீவிரவாதிகள் சிலர் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சிப்பதை கண்ட ராணுவ வீரர்கள், அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் இரு தரப்பிலும் மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் காவல்துறை கூடுதல் இயக்குநர் விஜய்குமார் தெரிவித்தார்.
எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் தனது பதிவில், “கொல்லப்பட்ட தீவிரவாதிகளை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. அங்கு தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை தொடர்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
லஷ்கர்-இ-தொய்பா: ஜம்மு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டம் அல்ஷிபோரா பகுதியில்கடந்த 10-ம் தேதி பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டையில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
அதற்கு முன் குல்காம் மாவட்டத்தில் கடந்த 4-ம் தேதி நடந்த என்கவுன்ட்டரில் ஹில்புல் முஜாகிதீன் அமைப்பின் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.