புதுடில்லி, சமூக வலைதளங்களில் பெண் குரலில் பேசி வீடியோ காலில் வரவழைத்து, அந்தரங்க வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த நபரை, புதுடில்லி போலீசார் நேற்று கைது செய்தனர்.
புதுடில்லியைச் சேர்ந்த நபர் ஒருவரை சமூக வலைதளம் வாயிலாக தொடர்பு கொண்ட பெண் ஒருவர், கடந்த சில நாட்களாக அவருடன் நட்பாக பழகி வந்தார்.
ஒரு நாள் வீடியோ காலில் தொடர்பு கொண்ட பெண், சம்பந்தப்பட்ட நபரை நிர்வாணமாக வரச் சொல்லி வற்புறுத்தினார்.
இதையடுத்து அவரும், அவர் கூறியபடி வந்தார். இதை, அந்த பெண் பதிவு செய்தார்.
அடுத்த நாளே, சம்பந்தப்பட்ட நபரிடம் மொபைல் போனில் பேசிய ஒருவர், தன்னை புதுடில்லி உதவி போலீஸ் கமிஷனர் ராம் பாண்டே என அறிமுகப்படுத்திக் கொண்டார்.
தன்னிடம் அவரின் அந்தரங்க வீடியோ உள்ளதாகவும், அதை நீக்க 9 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்றும் மிரட்டிஉள்ளார். சம்பந்தப்பட்ட நபரும், அந்த பணத்தை வழங்கினார்.
அடுத்த சில நாட்களில் மீண்டும் தொடர்பு கொண்ட ராம் பாண்டே, மேலும் 15 லட்சம் தருமாறு மிரட்டியுள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் புதுடில்லி போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், மஹேந்திர சிங், 36, என்பவர், பெண் குரலில் பேசியும், உதவி போலீஸ் கமிஷனர் போல் பேசியும் பணம் பறித்தது தெரியவந்தது.
இதையடுத்து, ஹரியானாவின் மேவத் பகுதியில் இருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக இது போன்ற செயலில் அவர் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளதால், இவரிடம் ஏமாந்தவர்கள் குறித்த பட்டியலை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்