புதுடெல்லி: தனது பாட்டிதான் தனது பலம் என்று மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நினைவுகூர்ந்துள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 39-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, ராகுல் காந்தி விடுத்துள்ள எக்ஸ் பதிவில், “எனது பலம், எனது பாட்டி. அவர் நாட்டுக்காக அனைத்தையும் தியாகம் செய்தார். நாட்டை எப்போதும் நான் பாதுகாப்பேன். உங்கள் நினைவுகள் எப்போதும் என்னுடன் இருக்கின்றன; என் இதயத்தில்” என்று தெரிவித்துள்ளார். இதனிடையே, இந்திரா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடமான ஷக்தி ஸ்தலில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்திரா காந்தியின் பேரனும், பாஜக எம்பியுமான வருண் காந்தியும் தனது பாட்டிக்கு அஞ்சலி செலுத்தி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “எனது பாட்டியின் நினைவு நாளில் அவருக்கு எனது வணக்கம். ஒப்பில்லாத துணிச்சல் கொண்டவர், ஜனநாயக சமதர்மத்தின் முன்னோடி அவர். கடுமையான முடிவுகளை உறுதியுடன் எடுத்தவர். அதேநேரத்தில் எளிமை மற்றும் தாய்மையின் அடையாளமாக விளங்கியவர். உண்மையில் நீங்கள்தான் தேச மாதா” என குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்தியாவின் முதல் பெண் பிரதமரும் எங்களின் வழிகாட்டியுமான இந்திரா காந்திக்கு, அவரது நினைவு நாளில் அஞ்சலி செலுத்துகிறேன். நமது நாட்டை வலிமையாகவும், முன்னேற்றகரமாகவும் கொண்டு செலுத்தியதில் மிக முக்கியப் பங்கு வகித்தவர் அவர். திறமை மிக்க தலைமைப் பண்பு, தனித்துவமான செயல் முறை, தொலைநோக்குப் பார்வை கொண்டவர் அவர்” என்று தெரிவித்துள்ளார்.