நாமக்கல்: “கர்நாடகாவில் ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் கட்சி தமிழகத்தை எதிரி நாடு போல பார்க்கிறது. இதை அமைச்சர் துரைமுருகன் உணர்ந்துகொள்ள வேண்டும்” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
பரமத்தி வேலூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ நடைப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே விவசாய பண்ணை வீடுகளில் தனியாக தங்கி இருக்கும் வயதான தம்பதியரை கொன்றுவிட்டு நகை மற்றும் பணம் கொள்ளை அடித்து செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு மன்னிப்பே கிடையாது. பரமத்தி வேலூர் இரட்டை கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளை காவல்துறையினர் விரைந்து கண்டுபிடிக்க வேண்டும். தமிழ்நாடு காவல்துறை கடுமையாக இருந்தால் மட்டுமே குற்றங்கள் நடக்கும் முன்பாகவே அவற்றை தடுத்து நிறுத்த முடியும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் பாஜக நிர்வாகி மீதும் காவல்துறை மீதும் திமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த மாவட்ட ஆட்சியரின் பேச்சைக்கூட கேட்காமல் திமுகவினர் அராஜக போக்கில் ஈடுபட்டனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு காவல்துறை, குற்றச் சம்பவங்கள் தடுக்கும் பணிகளில் அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்பட வேண்டும். தமிழகத்தில் மக்கள் வளர்ச்சியை கருதாமல் ஆளும் கட்சியின் அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் திமுக தலைவரையும் அவரது மகனையும் குறித்து புகழ் பாடுவதிலேயே குறியாக உள்ளனர். இதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை.
உயர்கல்வி மத்திய அரசின் பட்டியலில் உள்ளது. வேந்தர் நியமித்தல், சித்தா பல்கலைக்கழகம் தனித் தேர்வு போன்ற உயர்கல்வி சார்ந்த விஷயங்களில் மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. அதனால் தான் தமிழ்நாடு ஆளுநர் அவரது நிலைப்பாட்டில் உள்ளார். ஆளுநர், அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக எதையும் செய்யமாட்டார். ஆனால் திமுக அரசு வேண்டுமென்றே இந்த விஷயத்தில் ஆதாயம் பெற இதுபோன்று நடக்கிறது. என் மீதும் வழக்கு தொடர பல அரசியல் நாடகங்களை திமுக நடத்தி வருகிறது.
அதேபோல தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு உயர் பதவிக்கான பணியிடங்களை நியமிக்கும் போது, வெளிப்படை தன்மையோடு அரசு நடந்து கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் தமிழ்நாடு சட்ட அமைச்சரும் பிற அமைச்சர்களும் தமிழக மக்களை குழப்பி வருகிறார்கள். இண்டியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தான் கர்நாடகாவில் ஆட்சி செய்கிறது. அந்த கூட்டணியில் எந்த விதமான கொள்கை சம்பந்தங்களும் இல்லாத கட்சிகள் உள்ளன. காவிரி நதிநீர் பங்கீட்டில் காங்கிரஸும், திமுகவும் அரசியல் நாடகம் நடத்துவதை போலத்தான், இண்டியா கூட்டணியும் உள்ளது. கர்நாடகாவில் ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் கட்சி தான் தமிழகத்தை எதிரி நாடு போல பார்க்கிறது என்பதை அமைச்சர் துரைமுருகன் உணர்ந்து கொள்ள வேண்டும்” என்றார்.
டிஎன்பிஎஸ்சி என்பது மோசடி நிறுவனம்: தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பாஜக அண்ணாமலை பேசியதாவது: “தமிழகத்தில் உள்ள மோசமான நிறுவனம் டிஎன்பிஎஸ்சி தான். திமுக ஆட்சிக்கு வந்து 30 மாதம் ஆகவிட்டது. எனினும், இதுவரை 12 ஆயிரம் பேருக்கு மட்டும் தான் வேலை தான் வழங்கியுள்ளது. ஆனால், மத்திய அரசு இதுவரை 8.50 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கியுள்ளது. டிஎன்பிஎஸ்சி என்பது ஒரு மோசடி நிறுவனம். எந்தவொரு பதவிக்கும் பணம் நிர்ணயிக்கப்படுகிறது.
தமிழகத்தை ஒரு டிராமா கம்பெனி போல் அரசு நடத்துகிறது. திரைத்துறை மட்டுமில்ல, தமிழகத்தில் அனைத்து துறைகளையும் முதல்வர் குடும்பத்தினரே கையில் வைத்துக் கொள்ள பார்க்கின்றனர். பிரதமரின் எந்த ஒரு நல்ல திட்டமானாலும் அதற்கு ஸ்டிக்கர் ஒட்டுவது மட்டுமே திமுக தலைமையிலான ஆட்சி. 2014ம் ஆண்டு பிரதமர் மோடி ஆட்சிக்கு வரும்போது இந்திய தாய் தலைகுணிந்து இருந்தார். அப்போது ரூ.12 லட்சம் கோடி கொள்ளை அடித்திருந்தனர். இந்த கொள்ளை கும்பலுக்கு தலைமை திமுக தான்.
இண்டியா கூட்டணியில் இருப்பவர்கள் காங்கிரஸ் கட்சியில் பிரிந்து வந்தவர்கள். அவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர். அந்தக் கூட்டணியில் இருப்பவர்கள் இந்தியாவுக்கு எதிரானவர்கள்” எனப் பேசினார். இந்தக் கூட்டத்தில் பாஜக மாநில துணைத் தலைவர்கள் வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செந்தில் பாலாஜி ஜாமீன் காழ்ப்புணர்ச்சி இல்லை: கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “இஸ்ரேல் ஹமாஸ் பிரச்சினையில் ஐ.நா. கொண்டுவந்த தீர்மானத்தில் போர் எதனால் தொடங்கியது என்ற விபரம் தெரிவிக்கப்படவில்லை என்பதால்தான் இந்தியா நடுநிலையை கையில் எடுத்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை நம் பிரதமர் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் போரால் அவதியுறும் பாலஸ்தீன மக்களுக்கு துணை நின்று நிவாரண பொருட்களை அனுப்பி வருகிறார். ஹமாஸுக்கு மட்டும்தான் நாம் எதிரானவர்கள். பாலஸ்தீன மக்களுக்கு அல்ல.
ஆளுநர் என்.ரவி 13 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை எனக் கூறி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்துக்கு சென்றுள்ளது. 13 மசோதாக்களில் 12 மசோதாக்கள் தமிழகத்தில் இருக்கும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஆளுநருக்குரிய வேந்தர் பதவியை ஆளுநரிடம் இருந்து முதல்வருக்கு மாற்ற வேண்டும் என்பது. இந்த 12 மசோதாக்களும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானவை. மற்றொன்று சித்தா படிப்புக்கு நீட் தேர்வு வேண்டாம் என்பது. அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிராக மாநில அரசு வேலை செய்துகொண்டிருக்கும்போது ஆளுநர் தனது வேலையை செய்துகொண்டிருக்கிறார்.
பெரம்பலூரில் பாஜக நிர்வாகியை தாக்கி பெரும் தலைகுணிவை ஏற்படுத்தியிருக்கின்றனர். திமுக பாஜகவை பழிவாங்க ஆரம்பித்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய திமுகவினர் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் கைது செய்யவில்லையென்றால் நாளை (நவம்பர் 1) பெரம்பலூரில் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம். இதுபோன்ற வன்முறையை கண்காணிக்க பாஜக தலைமையிட குழுவினர் தமிழகம் வந்துள்ளனர். அவர்கள் மேலிடத்தில் இதுதொடர்பான அறிக்கையை சமர்ப்பிப்பார்கள்.
காவிரி பிரச்சினையில் கர்நாடக அரசுக்கு பாஜக துணையாக இருக்கிறது எனக் கூறுவதில் உண்மையில்லை. பாஜக ஆட்சி அங்கு நடக்கும்போதே அவர்களுக்கு எதிராக என் தலைமையில் உண்ணாவிரதம் நடத்தினோம். தமிழக பாஜகவை பொறுத்தவரை தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். மேலும் கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகளோடு சேர்ந்து மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். காவிரி நீர் பிரச்சினையில் மத்திய அரசு நடுநிலையோடுத்தான் செயல்படுகிறது. இந்த பிரச்னையில் யார், யாருக்கோ கடிதம் எழுதும் முதல்வர் மவுனம் சாதிப்பது எதற்கு எனத் தெரியவில்லை. உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தும் அதை கர்நாடக அரசு நிறைவேற்றாமல் இருப்பதை, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என கருதலாம்.
டிஎன்பிஎஸ்சி தலைவராக 61 வயதான சைலேந்திரபாபுவை நியமிக்க வேண்டும் என திமுக கூறுகிறது. வயது முதிர்வு காரணமாக அந்த நியமனத்துக்கு ஆளுநர் மறுப்பு தெரிவித்துள்ளார். செந்தில் பாலாஜி ஜாமீன் விவகாரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை. அவர் இன்னும் அமைச்சராக நீடிப்பதால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது. அவரது சகோதரர் அசோக்குமார் தலைமறைவாக இருக்கிறார். மேலும், வருமான வரி சோதனையின்போது அதிகாரிகளை திமுகவினர் தாக்கியுள்ளனர். அதனால் ஜாமீன் வழங்க முடியாது என்று நீதிபதியின் உத்தரவிலேயே உள்ளது. ஜாமீன் கேட்டு தற்போது உச்ச நீதிமன்றம் சென்றுள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம்” எனக் கூறினார்.