சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர் தங்கம் தென்னரசு.
அது குறித்து அவர் தெரிவித்தது. இன்று முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது. குறிப்பாக முதல்வர் பொறுப்பேற்றுக் கொண்ட இந்த இரண்டரை ஆண்டு காலத்தில் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. புதிய தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்கெனவே தமிழகத்தில் இயங்கி வரும் நிறுவனங்களும் புதிய முதலீடுகளை தமிழகத்தில் உருவாக்கும் நோக்கில் அரசுக்கு உரிய முன்மொழிவுகளை அளித்திருந்தன. அவர்களுக்கு அமைப்பு முறையினாலான தொகுப்பு சலுகைகளை வழங்குவது தொடர்பாக முடிவுகள் எடுக்கப்பட்டன.
சுமார் 8 தொழில் நிறுவனங்கள் அமைப்பு முறையினாலான தொகுப்பு சலுகைகளை பெறுவதற்கும், ஏற்கெனவே தமிழகத்தில் இயங்கி வரும் நிறுவனங்களின் தொழிற்சாலை விரிவாக்க நடவடிக்கை சார்ந்து சலுகைகளை பெறுவதற்கும் அவர்களின் கருப்பொருளை ஆய்வு செய்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் குறிப்பாக செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களில் ஏறத்தாழ 7,108 கோடி ரூபாய் முதலீடுகளில் சுமார் 22,536 நபர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்க கூடிய திட்டங்களுக்கு அமைச்சரவையில் அமைப்பு முறையிலான தொகுப்பு சலுகைகள் தொழில் நிறுவனங்களுக்கு வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தொழிற்சாலைகள் மின்சார வாகனம், காலணி உற்பத்தி, விண்வெளி மற்றும் பாதுகாப்பு பொருட்கள், கண்ணாடி பொருட்கள், ஆராய்ச்சி மேம்பாடு சார்ந்து முதலீடுகள் செய்ய உள்ளன.
அடுத்ததாக தமிழ்நாடு மாநில துறைமுக மேம்பாட்டு கொள்கை – 2023 குறித்து அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டு, அது குறித்து விவாதித்து, கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. தமிழகம் தொழில் துறையில் முன்னணி மாநிலமாக உள்ளது. இந்த மாநிலத்தில் கடற்கரை மிகவும் நீளமானது. சுமார் 1,076 கி.மீ. நீளமான கடற்கரையை நாம் பெற்றுள்ளோம். இதில் 4 பெரிய துறைமுகங்கள், 17 சிறிய துறைமுகங்களும் உள்ளன. நம்முடைய தொழில் வளர்ச்சிக்கு சிறந்த துறைமுக கட்டமைப்பு அவசியம். இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மாநில துறைமுக மேம்பாட்டு கொள்கை – 2023 வடிவமைக்கப்பட்டுள்ளது. துறைமுகங்கள் வளர்ச்சிக்காக இதனை வடிவமைத்துள்ளோம்.
கடந்த 16 ஆண்டுகளில் கடல்சார் வணிகத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான பல்வேறு மாநிலங்களிடையே பெரிய போட்டி நிலவுகிறது. இந்த வளர்ச்சி சார்ந்து தனியார் துறை முதலீட்டை ஈர்க்க இத்தகைய துறைமுக மேம்பாட்டு கொள்கை உருவாக்கப்படுவது அவசியமானதாக இருக்கிறது. இதையொட்டி மகாராஷ்டிரா, ஒடிசா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இப்போது நடைமுறையில் உள்ள கொள்கைகளை ஆய்வு செய்து, அதனை உள்வாங்கிக் கொண்டு, போட்டித்தன்மையை கவனித்து இந்த துறைமுக மேம்பாட்டு கொள்கையை உருவாக்கி இருக்கிறோம்.
கப்பல் மறுசுழற்சி வசதி, மிதவை கலன் கட்டுதல், துறைமுகங்களை மேம்படுத்துதல், அதனை வணிக ரீதியிலான சாத்தியமாக மாற்றுவதற்கான விஷயங்கள், அது சார்ந்த அனுமதியை முறைப்படுத்துவது, வியாபாரத்தை எளிதாக்குதல் தொடர்பாக இந்த கொள்கையை உருவாக்கி உள்ளோம். சவாலான நீர் விளையாட்டுகள், பசுமை துறைமுக திட்டங்கள், ஆழ்கடல் துறைமுக வளர்ச்சி சார்ந்த முதலீடு தனியார் பங்களிப்புடன் பெறப்பட உள்ளது. இது அனைத்தையும் உள்ளடக்கி இந்த கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.
திருச்சி மற்றும் சேலம் மாவட்டங்களில் பத்திரிகையாளர்களுக்கு நிலம் வழங்குவது தொடர்பாக அமைச்சரவையில் மிக முக்கியமான முடிவை எடுத்துள்ளோம் என தெரிவித்தார்.