லக்னோ,
இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்ப்ரீத் பும்ரா. இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார். இந்த உலகக்கோப்பையில் இதுவரை 6 ஆட்டங்களில் ஆடியுள்ள பும்ரா 14 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளார்.
இந்த உலகக்கோப்பைக்கு முன்னர் பும்ரா கடந்த சில மாதங்களாக காயம் காரணமாக கிரிக்கெட் விளையாடாமல் ஒதுங்கி இருந்தார். அப்போது பல்வேறு தரப்பில் இருந்தும் பும்ரா காயத்தில் இருந்து மீண்டு வருவது மிகவும் கடினம். அவரால் இனி சரியாக கிரிக்கெட் விளையாட முடியாது என விமர்சனங்கள் வந்தன.
இந்நிலையில் காயம் காரணமாக கிரிக்கெட் விளையாடாமல் ஒதுங்கி இருந்த நேரத்தில் எழுந்த விமர்சனங்கள் குறித்து தற்போது பும்ரா பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
என்னுடைய மனைவியும் விளையாட்டு சம்பந்தமான ஊடகத்தில் வேலை செய்து வருகிறார். அதனால் என்னால் கம்பேக் கொடுக்கவே முடியாது என்பது போன்ற கருத்துகளையும் கிண்டல்களையும் நானும் கேள்விப்பட்டேன். ஆனால் அது முக்கியமல்ல. தற்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
ஏனெனில் கம்பேக் கொடுத்த பின் நான் இந்த விளையாட்டை எந்தளவுக்கு விரும்பி விளையாடுகிறேன் என்பதை உணர்ந்துள்ளேன். தற்போது அனைத்தையும் நேர்மறையாக பார்க்கிறேன். முடிந்த வரை இந்த விளையாட்டை அனுபவித்து விளையாட முயற்சிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.