பழநி: பழநி மலைக்கோயிலுக்கு செல்லும் 3-வது வின்ச் ரயில் கட்டணத்தை ரூ.60 ஆக உயர்த்துவது தொடர்பாக நவம்பர் 25-க்குள் பக்தர்கள், பொதுமக்கள் தங்கள் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் எளிதில் செல்லும் வகையில் 3 மின் இழுவை ரயில்கள் (வின்ச்) இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் அடிவாரத்தில் இருந்து மலைக்கோயிலுக்கு செல்ல ரூ.10 மற்றும் ரூ.50-ம், மலைக்கோயிலில் இருந்து அடிவாரத்துக்கும் ரூ.10 மற்றும் ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது 3-வது வின்ச் ரயில் குளிர்சாதன வசதியுடன் ஒரே நேரத்தில் 72 பேர் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த வின்ச் ரயிலை இயக்க உதவும் ஜெனரேட்டரின் இயக்கம், பராமரிப்பு செலவினங்களை கருத்தில் கொண்டு, அடிவாரத்தில் இருந்து மலைக்கோயிலுக்கும், மலைக்கோயிலில் இருந்து அடிவாரத்துக்கும் சென்று வர கட்டணம் ரூ.60-ஆக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் ஆட்சேபனை மற்றும் ஆலோசனை இருப்பின் நவ.25-ம் தேதிக்குள் எழுத்து பூர்வமாக, ‘இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழநி’ என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம் என கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
ரோப் கார் மீட்பு ஒத்திகை: இதனிடையே, தேசிய பேரிடர் மீட்பு படை மூலம் பழநியில் ரோப் காரில் சிக்கிக் கொள்ளும் பக்தர்களை மீட்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி இன்று (அக்.31) நடைபெற்றது. பழநி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல படிப்பாதை, யானைப் பாதை, மின் இழுவை ரயில் (வின்ச்) மற்றும் ரோப் கார் ஆகிய வசதிகள் உள்ளன. இதில் ரோப் காரில் 3 நிமிடங்களில் மலைக்கோயிலை அடையலாம். இதனால் ரோப் காரில் அதிகளவில் பக்தர்கள் பயணிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்நிலையில், பழநி மலைக்கோயிலுக்கு செல்லும் ரோப் காரில் பயணிக்கும் போது எதிர்பாராதவிதமாக ஏற்படும் விபத்துக்களை எதிர்கொள்ளும் அவசரகால மீட்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சி அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை மூலம் இன்று (அக்.31) பிற்பகலில் நடைபெற்றது. இதில் கமாண்டர் அர்ஜூன் பால் ராஜ்புத் தலைமையில் 27 பேர் கொண்ட வீரர்கள் ஒத்திகை பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்தரத்தில் தொங்கியபடி நின்றிருந்த ரோப் காரில் சிக்கிக் கொண்ட பக்தர்களை வீரர்கள் பாதுகாப்பாக மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்து ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்வது போன்று செயல் விளக்கம் அளித்தனர். இதில், கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, பழநி கோட்டாட்சியர் சரவணன், வட்டாட்சியர் பழனிச்சாமி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அனிதா, தீயணைப்பு துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.