மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு பருவமழை குறைவாகவே பெய்திருக்கிறது. ஆனால், நாக்பூரில் கடந்த செப்டம்பர் மாதம் 22, 23-ம் தேதிகளில் கனமழை பெய்தது. கனமழை காரணமாக நாக்பூர் நகரமே வெள்ளத்தில் மூழ்கியது. வீடுகள், அலுவலகங்களுக்குள் மழை நீர் புகுந்து மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள். நூற்றுக்கணக்கானோர் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டனர். நாக்பூரில் ஓடும் நாக் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால்தான், தண்ணீர் நகரத்துக்குள் புகுந்தது. நாக் ஆற்றங்கரையோரம் பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் மண்டல அலுவலகம் இருக்கிறது. இந்த அலுவலகத்திலிருந்துதான் நாக்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வங்கிகளுக்குப் பணம் பட்டுவாடா செய்யப்பட்டு வந்தது. இதற்காக ரிசர்வ் வங்கி பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தது.
ரிசர்வ் வங்கியில் இருந்து பணம் நேரடியாக பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவில் டெலிவரி செய்யப்படும். அங்கிருந்து மற்ற வங்கிகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டு டெலிவரி செய்யப்படும். அதே போன்று மற்ற வங்கிகள் கொடுக்கும் பணமும் நாக்பூர் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா மண்டல அலுவலகத்தில் சேமிக்கப்படும். இந்த மண்டல அலுவலகத்தில் பணம் இருந்த அறைக்குள், மழை வெள்ளம் புகுந்தது. தண்ணீர் பல அடி உயரத்துக்கு வங்கிக்குள் சேர்ந்தது. வங்கியில் இருந்த தண்ணீரை வெளியில் அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் 24 மணி நேரம் எடுத்துக்கொண்டனர்.
மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றவே மாநகராட்சி ஊழியர்களுக்கு ஒரு நாள் எடுத்துக்கொண்டதால், வங்கியில் இருந்த பணம் முழுக்க தண்ணீரில் மூழ்கி வீணானது. இதில் அதிகப்படியான பணம் பயன்படுத்த முடியாத அளவுக்கு வீணாகிவிட்டது. ரூ.400 கோடி அளவுக்கு பணம் வீணாகிவிட்டதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். சேதம் அடைந்த ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் பார்வையிட்டனர். சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை அதிகாரிகள் எண்ணி ஸ்கேன் செய்து கணக்கில் எடுத்துக்கொண்டனர்.
அந்த ரூபாய் நோட்டுகளுக்கு பதிலான மாற்று ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி வழங்கியது.
அதேசமயம் வெள்ளத்தில் ரூபாய் நோட்டுகள் அடித்துச்செல்லப்பட்டு இருந்தால், அந்த பணத்திற்கான இழப்பை வங்கி நிர்வாகம்தான் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துவிட்டது. மழை வெள்ளம் புகுந்ததால் வங்கி சேவை பாதிக்கப்படவில்லை.
வெள்ளம் வங்கிக்குள் புகுந்தபோதும் தொடர்ந்து அதே மண்டல வங்கியில்தான் இப்போதும் ரிசர்வ் வங்கி பணப் பரிவர்த்தனையை மேற்கொள்கிறது. எதிர்காலத்தில் இது போன்ற பிரச்னை ஏற்படாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.