பெங்களூரு : ஜெயநகர் வணிக வளாகத்தில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் செயல்படும் கடைகளை அகற்றாத பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் துஷார் கிரிநாத்திற்கு, நீதிமன்ற அவமதிப்பு ‘நோட்டீஸ்’ வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பெங்களூரு, ஜெயநகரில் மாநகராட்சிக்குச் சொந்தமான வணிக வளாகம் அமைந்துள்ளது. இங்கு, முதலாம் பிளாக்கின் தரை தளத்தில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில், கடைகள் செயல்பட்டு வந்தன.
இதுதொடர்பான வழக்கு கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அப்போது, ‘2, 3, 4 பிளாக்குகள் அமைத்த பின், முதல் மாடியில் வாகனங்கள் நிறுத்துவதற்கு அனுமதி அளிக்கப்படும்’ என, 2020ல் பெங்களூரு மாநகராட்சி தரப்பில் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், வணிக வளாகம் முழுமையாக கட்டிய பின், வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் உள்ள கடைகளை அகற்றும்படி, மாநகராட்சி கமிஷனருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவு பிறப்பித்து, மூன்று ஆண்டுகள் ஆகியும், இதுவரை கடைகள் அகற்றப்படவில்லை. இதனால், நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளதாக கூறி, கமிஷனருக்கு எதிராக வழக்கறிஞர் ஆர்.ஆர்.ஹிரேமத், நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
கமிஷனர் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர உத்தரவிடும்படி மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இம்மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம், ‘உங்கள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கூடாது’ என்று கேள்வி எழுப்பி, மாநகராட்சி கமிஷனர் துஷார்கிரிநாத்துக்கு ‘நோட்டீஸ்’ வழங்க உத்தரவிட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement