பெலகாவி : மஹாராஷ்டிரா அமைச்சர்கள் மூன்று பேர், ஒரு எம்.பி., ஆகியோருக்கு, கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா – மஹாராஷ்டிரா எல்லையில், பெலகாவி மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தில் மராத்தி மொழி பேசும் மக்கள், கணிசமாக வசிக்கின்றனர். இதனால் பெலகாவியை, மஹாராஷ்டிரா மாநிலம் சொந்தம் கொண்டாடுகிறது.
ஆனால், ‘பெலகாவி, எங்களது பகுதி’ என்று, கர்நாடகா கூறுகிறது. இரு மாநிலங்கள் இடையில், பெலகாவி மாவட்டத்தை வைத்து, பல ஆண்டுகளாக பிரச்னை உள்ளது.கர்நாடகா தனி மாநிலமாக உதயமான நவம்பர் 1ம் தேதியை, ஆண்டுதோறும் கன்னட ராஜ்யோத்சவா தினமாக மாநிலம் முழுதும் கொண்டாடி வருகின்றனர்.
ஆனால், பெலகாவியில் செயல்படும், எம்.இ.எஸ்., எனும் மஹாராஷ்டிரா ஏகிகிரண் சமிதி அமைப்பினர், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.கன்னட ராஜ்யோத்சவாவை, கருப்பு தினமாகவும் அனுசரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று கன்னட ராஜ்யோத்சவா கொண்டாடப்பட உள்ளதை ஒட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மஹாராஷ்டிரா அமைச்சர்களான சிவசேனா கட்சியை சேர்ந்த, ஷம்புராஜ் தேசாய், தீபக் வசந்த் கேசர்கர், பா.ஜ.,வை சேர்ந்த அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல்.சிவசேனா எம்.பி., தைரியஷீல் சம்போஜிராவ் மானே ஆகியோர், பெலகாவி மாவட்டத்திற்குள் நுழைய இன்றும், நாளையும், தடை விதித்து, கலெக்டர் நித்தேஷ் பாட்டீல், உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
இவர்கள் நால்வரும் ஏற்கனவே, பலமுறை பெலகாவிக்கு வந்து, எம்.இ.எஸ்., அமைப்பினருக்கு ஆதரவாக பல போராட்டங்களில் பங்கேற்றதால், இவர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. கன்னட ராஜ்யோத்சவா அன்று, பெலகாவியில் எம்.இ.எஸ்., அமைப்பினர் கருப்பு தினம் அனுசரிக்க, திட்டமிட்டு இருந்தனர். இதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுஉள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்