புதுடில்லி, தேர்தல் பத்திரங்கள் வாயிலாக கடந்த 2022 வரை வசூலான 9188 கோடி ரூபாய் நன்கொடையில் 57 சதவீதம் பா.ஜ.வுக்கும் 10 சதவீதம் காங்கிரஸ் கட்சிக்கும் சென்றுள்ளதாக புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.
கடந்த 2016 – 17 முதல் 2021 – 22 வரையிலான காலகட்டத்தில் தேர்தல் பத்திரம் வாயிலாக அரசியல் கட்சிகளுக்கு கிடைத்த நன்கொடை விபரங்களை ஏ.டி.ஆர். எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதன் விபரம்:
கடந்த 2016 – 17 முதல் 2021 – 22 வரையிலான காலகட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கு 16437 கோடி ரூபாய் நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது.
இவை ஏழு தேசிய கட்சிகள் மற்றும் 24 மாநில கட்சிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளன.
இந்த தொகையில் 9188 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் வாயிலாக வழங்கப்பட்டுள்ளது.
இதில் பா.ஜ.வுக்கு 5272 கோடி ரூபாயும் காங்கிரசுக்கு 952 கோடி ரூபாயும் கிடைத்துள்ளது. அதாவது 57 சதவீதம் பா.ஜ.வுக்கும் 10 சதவீதம் காங்கிரஸ் கட்சிக்கும் கிடைத்துள்ளது; மீதி தொகை இதர கட்சிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே தேர்தல் பங்கு பத்திர விற்பனை ஜனநாயகத்தை சீர்குலைத்து ஊழலை ஊக்குவிப்பதாக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வு நேற்று முதல் விசாரிக்க துவங்கியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement