இனி பரிசோதனை முயற்சி இல்லை, கொண்டாட்டம்தான் : புதிய படம் பற்றி பார்த்திபன் விளக்கம்
ஒருவர் மட்டுமே நடித்த 'ஒத்த செருப்பு', ஒரே ஷாட்டில் படமான 'இரவின் நிழல்' என சாதனை படங்களை இயக்கிய பார்த்திபன் தற்போது வழக்கமான பாணியில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு இமான் இசை அமைப்பதாக அண்மையில் அறிவித்திருந்தார். இந்த நிலையில் படத்தை பற்றி விளக்கமாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது:
நான் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறேன். அந்தப் படத்தின் தலைப்பை விரைவில் அறிவிப்பேன். வெறும் ரசிகர்களுக்கான திரைப்படமாக இருந்தால் ஏதோ ஒரு படத்தை எடுத்துவிடலாம், ஆனால், நான் எடுக்கும் திரைப்படம் ரசனை மிகுந்தவர்களுக்கான திரைப்படம். இந்தமுறை நான் லீனியர், எக்ஸ்பிரிமென்டல் என எந்தப் பிரச்னைகளுக்குள்ளும் போகாமல், முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடவும் குழந்தைகள் ரசிக்கவும் ஒரு படம் தயாராகிறது. நானும் குதூகலமாக இருக்கிறேன், ஏனென்றால் அந்தப் படத்துக்கான டப்பிங் பணிகள் நடந்து வருகின்றன.
என்னுடைய அறிவுக்கு எட்டிய அளவில் படத்தில் உள்ள தவறுகளை திருத்தி உங்கள் பார்வைக்கு எடுத்து வருவேன். படத்தில் விஎப்எக்ஸ் பணிகள் நிறைய உள்ளன. நாம் வழக்கமாக ஹாலிவுட் படங்களை மட்டுமே கொண்டாடுவோம், ஹாலிவுட் படங்களைபோல நம்மால் எடுக்க முடியாது. ஆனால் நமக்கு இருக்கும் ஒரே கட்டுப்பாடு படத்தின் பட்ஜெட்தான்.
தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலத்திலேயே அவ்வையார், சந்திரலேகா, ஆயிரத்தில் ஒருவன், உலகம் சுற்றும் வாலிபன் உள்ளிட்ட பிரமாண்ட திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. நான் எடுக்கும் படம் பிரமாண்டமான படம் அல்ல. ஆனால் ரொம்ப நுணுக்கமான படம். அதற்கான நிறைய விஎப்எக்ஸ் வேலைகள் நடைபெற்று வருகின்றன. முடிந்ததும் நான் விரைவில் உங்களை நல்ல படத்துடன் சந்திக்கிறேன்.
இவ்வாறு அந்த வீடியோவில் பேசி உள்ளார்.