ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே கொடகரை மலைக் கிராமத்தில் வலுவிழந்த தொகுப்பு வீடுகளை அகற்றி விட்டு, புதிய வீடுகளைக் கட்டிக் கொடுக்க வேண்டும் என பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேன்கனிக்கோட்டை அருகே தொட்டமஞ்சி ஊராட்சிக்கு உட்பட்ட மலைக் கிராமம் கொடகரை. அடந்த வனப்பகுதிக்கு நடுவில் உள்ள இக்கிராமத்தில் பழங்குடியின மக்கள் 150 பேர் வசித்து வருகின்றனர். பேருந்து வசதியில்லை: இவர்கள் வனத்தில் தேன் எடுத்தல், விறகுகளைச் சேகரித்தல், பழங்களைப் பறித்து விற்பனை செய்வது, கால்நடை வளர்ப்பு ஆகிய தொழில்களில் ஈடுபட்டுவருகின்றனர். இம்மலைக் கிராமத்துக்குச் செல்லும் மண் சாலை கடந்த 2014-ம் ஆண்டு தார் சாலையாக மாற்றப்பட்டது.ஆனால், பேருந்து இயக்கம் இல்லாததால் வனத்துறை மூலம் வேன் இயக்கப்படுகிறது. மேலும், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் பழங்குடியின மக்கள் 113 பேருக்கு தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. தற்போது, அந்த வீடுகளின் மேற்கூரைகளில் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிவதோடு, சுவர்களில் விரிசல் ஏற்பட்டு கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
காக்கும் பிளாஸ்டிக் கவர்: இதனால், மழைக் காலங்களில் வீடுகளில் மழைநீர் உள்ளே புகுவதைத் தடுக்க வீட்டின் மேற்கூரையை பிளாஸ்டிக் கவர் மூலம் கட்டி பாதுகாத்து வருகின்றனர். மேலும், இங்கு போதிய குடிநீர், கழிப்பறை மற்றும் மருத்துவ வசதி இல்லாததால், பல்வேறு சிரமங்களை மக்கள் சந்தித்து வருகின்றனர். இதுதொடர்பாக அப்பகுதி பழங்குடியின மக்கள் கூறியதாவது: மலையில் கிடைக்கும் தேன், பழங்கள் மற்றும் விறகுகளைச் சேகரித்து தருமபுரி மாவட்டம் பென்னாகரம் மற்றும் தேன்கனிக்கோட்டைக்கு நடந்து சென்று விற்பனை செய்கிறோம். அரசு வழங்கிய தொகுப்பு வீடுகள் வலுவிழந்து சுவர்கள் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளன. மிக மோசமான நிலையில் உள்ள வீடுகளில் வசிப்போர் வீட்டை காலி செய்து வீட்டின் அருகே குடிசை அமைத்து வசித்து வருகின்றனர்.
வேலையும் இல்லை: சிலர் வீட்டின் மேற்கூரைக்கு மரக்கட்டைகள் மூலம் முட்டுக்கொடுத்துள்ளனர். இங்கு வாரம் ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஒரு வீட்டுக்கு 10 குடம் தண்ணீர் மட்டும் கிடைக்கும். எங்களுக்கு 100 நாள் திட்டத்தில் வேலை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், பணிகள் வழங்கவில்லை. மருத்துவமனை இல்லாததால், 10 நாட்களுக்கு ஒருமுறை அஞ்செட்டியிலிருந்து செவிலியர்கள் வந்து மருந்து, மாத்திரைகளை வழங்கி வருகின்றனர். கர்ப்பிணிகள் மற்றும் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களை 33 கிமீ தூரத்தில் உள்ள தேன்கனிக்கோட்டைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலையுள்ளது.
எனவே, மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள தொகுப்பு வீடுகளை அகற்றி விட்டு புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கவும், குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.