கோவா திரைப்பட விழாவில் தமிழ் லெஸ்பியன் படம்
சினிமாவில் லெஸ்பியன் தொடர்பான கதைகள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் ஓடிடியில் வெளியான 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே' என்ற படம் இஸ்லாமிய பெண்ணுக்கும், இந்து பெண்ணுக்கும் இடையிலான லெஸ்பியன் உறவை பற்றியதாக இருந்தது. தற்போது லென்ஸ், மஸ்கிடோபிலாஷபி, தலைக்கூத்தல் போன்ற கவனிக்க வைத்த படங்களை இயக்கிய ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் 'காதல் என்பது பொதுவுடமை' என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படமும் லெஸ்பியன் உறவை பற்றியது.
இந்த படம் வருகிற நவம்பர் 20ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை நடக்கும் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது. இதே விழாவில் பொன்னியின் செல்வன், விடுதலை படங்களும் திரையிட தேர்வாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் லிஜோமோல் ஜோஸ், ரோகிணி, வினீத், கலேஷ் ராமானந்த், அனுஷா, தீபா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஸ்ரீசரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கண்ணன் நாராயணன் இசை அமைத்துள்ளார். படம் பற்றி இயக்குனர் ஜெயபிரகாஷ் கூறும்போது “ இது ஒரு நவீன காதல் கதையாகும். இன்றைய நவீன காலகட்டத்தில் மனிதர்களின் உணர்வுகள், மன ஓட்டங்கள், சமூக சூழல் மற்றும் விஞ்ஞானம் இவற்றுக்கு நடுவே மனிதர்களுக்குள் நவீனப்பட்டிருக்கும் காதலை வேறு ஒரு கோணத்தில் இந்த திரைப்படம் பேசுகிறது. சுருக்கமாக சொல்வதென்றால் காதல் என்பது இரு உடல்கள் சம்பந்தப்பட்டதல்ல, இரு மனங்கள் சம்பந்தப்பட்டது என்பதையே இந்த படம் பேசுகிறது” என்றார்.