சதமாக விளாசும் டீகாக்… அப்போ ஓய்வு முடிவு வாபஸா?

தென்னாப்பிரிக்கா அணியின் இளம் நட்சத்திரம் குயின்டன் டிகாக், இந்த உலக கோப்பை கிரிக்கெட்டில் உட்சபட்ச பார்மில் இருக்கிறார். இதுவரை 3 சதங்களை இந்த உலக கோப்பை தொடரில் மட்டும் அடித்திருந்த டி காக், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் சதம் விளாசி அமர்களப்படுத்தியுள்ளார். அதாவது இந்த உலக கோப்பையில் மட்டும் அவர் விளாசியிருக்கும் மொத்த சதங்களின் எண்ணிக்கை 4 ஆகும். அத்துடன் இந்த உலக கோப்பையில் 500 ரன்களுக்கு மேல் அடித்தவர்களின் பட்டியலிலும் இணைந்திருக்கிறார். ஓர் உலக கோப்பையில் இதுவரை எந்த தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேனும் 500 ரன்களுக்கும் மேல் அடித்ததில்லை. அந்த சாதனை இப்போது டிகாக் வசம் வந்திருக்கிறது. 

இலங்கை அணிக்கு எதிராக சதம் அடித்த டிகாக், அடுத்ததாக ஆஸ்திரேலியா, வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து என தொடர்ந்து கொண்டிருக்கிறது. டிகாக்கை பொறுத்தவரையில் தென்னாப்பிரிக்கா அணியின் நீண்ட நாள் ஏக்கமான உலக கோப்பையை உச்சி முகர வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றிக் கொடுத்துவிட வேண்டும் என்பது தான். அதுவும் தான் விளையாடும் இந்த கடைசி உலக கோப்பை போட்டியில் நடந்துவிட வேண்டும் என்கிற பெரும் ஆசையும் இருக்கிறது. அவரைப் போலவே அணியில் இருக்கும் மற்ற வீரர்களும் இப்போது சிறப்பாக விளையாடுவதால் இப்போதைக்கு அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட தென்னாப்பிரிக்கா உறுதி செய்திருக்கிறது. இதனால் டிகாக் ஓய்வு அறிவிப்பை திரும்ப பெறுவாரா? என்ற கேள்வியும் தென்னாப்பிரிக்கா ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

 November 1, 2023

இந்த உலக கோப்பையில் தென்னாப்பிரிக்கா அணியின் பேட்டிங்கில் டிகாக், கிளாசன், வான்டர் டசன், ஹென்றிக்ஸ், மில்லர் என ஒரு பட்டாளமே நம்பிக்கை கொடுக்க, பந்துவீச்சில் ரபாடா, ஜேன்சன், நிகிடி, கேசவ் மகாராஜ் ஆகியோர் நட்சத்திரங்களாக ஜொலிக்கின்றனர். குறிப்பாக முதல் பேட்டிங் தென்னாப்பிரிக்கா என்றால் ஸ்கோர் 350 ரன்களுக்கு மேல் நான் இருக்கும் என்றாகிவிட்டது. அந்தளவுக்கு தென்னாப்பிரிக்கா அணியின் பேட்டிங் பலம் அசுரத்தனமாக இருக்கிறது. இப்படி பேட்டிங் பவுலிங் வைத்துக் கொண்டு எப்படி தான் நெதர்லாந்து அணியிடம் தோற்றார்கள் என்று பலரும் கேட்டுக் கொண்டிருக்கும்போது, நாங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது கடித்த கொசு பெரிய ஆளாகிவிட்டது, மற்றபடி எங்களை சீண்டிக்கூட பார்க்க முடியாது என்கிற ரேஞ்சுக்கு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது தென்னாப்பிரிக்கா. 

உலக கோப்பை புள்ளிப் பட்டியலில் இந்தியாவுக்கும், தென்னாப்பிரிக்கா அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவிக் கொண்டிருக்கிறது. யார் முதலிடத்தைப் பிடிப்பதில் இருவரும் சரிசமமாக இருக்கிறார்கள். இந்திய அணி ஏதேனும் ஒரு போட்டியில் தோற்றால் தென்னாப்பிரிக்கா அணி ரன்ரேட் அடிப்படையில் முதலிடத்துக்கு செல்ல வாய்ப்புள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.