திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் குறைத்தோட்டம் என்ற பகுதியில் வசித்து வந்த மோகன்ராஜ், அவரின் சகோதரர் செந்தில்குமார், மோகன்ராஜின் தாய் புஷ்பவதி, சித்தி ரத்தினம்பாள் ஆகியோர், கடந்த செப்டம்பர் மாதம் 3-ம் தேதி வெட்டிக் கொலைசெய்யப்பட்டனர். இந்தக் கொலைச் சம்பவம் குறித்து பல்லடம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரிக்கையில், கள்ளக்கிணறு பகுதியில் வசித்த திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்ற ராஜ்குமார், அவரின் நண்பர்களான செல்லமுத்து, சோனை முத்தையா ஆகியோர் கள்ளக்கிணறு பகுதியிலுள்ள மோகன்ராஜின் தோட்டத்தில் அமர்ந்து மது அருந்தியிருக்கின்றனர்.
இதைத் தட்டிக்கேட்டதில் ஆத்திரமடைந்த வெங்கடேஷ் உள்ளிட்ட மூவரும், மோகன்ராஜின் வீட்டுக்குச் சென்று தகராறில் ஈடுபட்டதுடன், மோகன்ராஜ், செந்தில்குமார், புஷ்பவதி, ரத்தினமாள் ஆகிய நான்கு பேரையும் சரமாரியாக வெட்டிக் கொலைசெய்தது தெரியவந்தது. இது தொடர்பாக சம்பவம் நிகழ்ந்த அன்றிரவே, செல்லமுத்து கைதுசெய்யப்பட்டார். தலைமறைவாக இருந்த முக்கியக் குற்றவாளிகளான வெங்கடேஷையும், சோனை முத்தையாவையும் போலீஸார் தேடிவந்தனர். இந்த நிலையில், விசாரணைக்காக கொலை நடந்த கள்ளக்கிணறு பகுதிக்கு, செல்லமுத்துவை போலீஸார் அழைத்துச் சென்றபோது, அவர் தப்ப முயன்றதில், வழுக்கி விழுந்து அவருக்குக் காலில் முறிவு ஏற்பட்டது.
இந்தக் கொலை தொடர்பாக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தலைமறைவான வெங்கடேஷ், சோனை முத்தையாவை போலீஸார் தேடிவந்தனர். இதற்கிடையே இந்தக் கொலைக்கு உதவியதாக வெங்கடேஷின் தந்தை ஐயப்பனை போலீஸார் கைதுசெய்தனர். இதையடுத்து, சில நாள்களில் வெங்கடேஷும், சோனை முத்தையாவும் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் சரணடைந்தனர். கொலைக்குப் பயன்படுத்திய அரிவாளை எடுப்பதற்காக வெங்கடேஷை கள்ளக்கிணறு பகுதிக்கு அழைத்துச் சென்றபோது, போலீஸார்மீது கற்களை வீசித் தாக்கிவிட்டு, வெங்கடேஷ் தப்ப முயன்றதாகவும், அப்போது பாதுகாப்புக்காக சுட்டதில் வெங்கடேஷின் இரண்டு கால்களில் குண்டு பாய்ந்தாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
இந்தக் கொலை வழக்கில் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், ஐந்தாவது நபராக முக்கியக் குற்றவாளியான வெங்கடேஷின் சகோதரரான செல்வம் என்பவரையும் போலீஸார் கைதுசெய்தனர். முக்கியக் குற்றவாளியான வெங்கடேஷ், அவரின் தந்தை ஆகியோர்மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன. மற்ற இரண்டு குற்றவாளிகளான செல்லமுத்து, சோனை முத்தையா ஆகிய இருவரும், இந்தக் கொலைக்கு முக்கிய உடந்தைகளாக இருந்ததால், 4 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.
தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தக் கொலைச் சம்பவம் குறித்து, பல்லடம் காவல் துணைக் கண்காணிப்பாளர் செளமியா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, புலன் விசாரணையும், சாட்சியங்களிடம் விசாரணையும் தீவிரமாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, நால்வர் கொலை தொடர்பாக பல்லடம் குற்றவியல் நீதிமன்றத்தில் 800 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையைக் காவல்துறையினர் தாக்கல் செய்திருக்கின்றனர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, வரும் நாள்களில் இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்ற விசாரணை தொடங்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.