புதுடெல்லி: தாய்லாந்தின் பொருளாதாரத்தில் சுற்றுலா துறை 20 சதவீத பங்களிப்பை வழங்கி வருகிறது. அந்த நாட்டின் 7 கோடி மக்கள் தொகையில், சுமார் ஒரு கோடி பேர் சுற்றுலாவினால் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.
சீனாவில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுவதால் தாய்லாந்துக்கு சுற்றுலா செல்லும் சீனர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. உக்ரைன் போர், இஸ்ரேல்- ஹமாஸ் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தாய்லாந்தின் சுற்றுலா துறை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து இந்திய சுற்றுலா பயணிகளுக்கு தாய்லாந்து அரசு சிவப்பு கம்பளம் விரித்துள்ளது. இதுதொடர்பாக தாய்லாந்து சுற்றுலா துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “2023-ம் ஆண்டு நவம்பர் 10-ம் தேதி முதல் 2024-ம் ஆண்டு மே 10-ம் தேதி வரை தாய்லாந்தில் பயணம் மேற்கொள்ள இந்தியர்களுக்கு விசா தேவையில்லை. தாய்லாந்து வரும் இந்தியர்கள் 30 நாட்கள் விசா இல்லாமல் தங்கியிருக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டில் மட்டும் 2.1 கோடி இந்தியர்கள் வெளிநாட்டில் சுற்றுப் பயணம் செய்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, அமெரிக்கா, சிங்கப்பூர், தாய்லாந்து, பிரிட்டன், கத்தார், குவைத், கனடா, ஓமன் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியர்கள் அதிக அளவில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.