புதுச்சேரி: புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் தமிழகம், ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்கள் உதய நாள் மற்றும் புதுச்சேரி விடுதலை நாள் விழா இன்று இரவு நடைபெற்றது. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதில் ஆளுநர் தமிழிசை பேசியதாவது: புதுச்சேரி விடுதலை நாள் இன்று கொண்டாடப்படுகிறது. புதுச்சேரிக்கு என தனித்த சரித்திரம் உள்ளது. பொதுவாக மாநிலங்கள் போராட்டத்தில் உதயமாகின. ஆனால், புதுச்சேரி மட்டும் ஜனநாயக முறைப்படி வாக்கெடுப்பு நடத்தப்பட்டு உதயமானது. புதுச்சேரி மாநிலம் சிறியதாக இருந்தாலும், பெரிய மாநிலங்களை விட வளர்ச்சி பெற்றுள்ளது.
பாரதத்தின் விடுதலைக்கு வித்திட்ட பூமியாக புதுச்சேரி விளங்கியது. பாரதி, பாரதிதாசன், அரவிந்தர், வ.வே.சு.அய்யர், வாஞ்சிநாதன் போன்றோர் இங்கு வந்துள்ளனர். இந்திய விடுதலை போராட்டத்தில் புதுச்சேரிக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது.
புதுச்சேரி தாய்மடி போல். யாருக்கெல்லாம் பிரச்சினை இருக்கிறதோ அவர்களையெல்லாம் நிச்சியம் புதுச்சேரி தாங்கிப்பிடிக்கும். புதுச்சேரி மற்றவர்களுக்கும் உதவும். தன் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் உதவும்.
புதுச்சேரி பெஸ்ட், பாஸ்ட் மற்றும் பெஸ்ட் பெஸ்ட் புதுச்சேரியாக மாறிக்கொண்டிருக்கிறது. அதற்கு உறுதுணையாக மத்திய அரசும் உதவி செய்து கொண்டிருக்கிறது. குறிப்பாக 13 ஆண்டுகளுக்குப் பிறகு முழு நிதிநிலை அறிக்கையை இந்த அரசு தான் தாக்கல் செய்திருக்கிறது. இதில் இருந்தே நமது வெற்றி ஆரம்பமாகியுள்ளது.
மக்களுக்கான திட்டங்கள் ஒவ்வொன்றாக சிறப்பாக செயலாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. புதுச்சேரியின் கலை நிகழ்ச்சிகளை அடித்துக்கொள்ள ஆளே இல்லை. புதுச்சேரி என்றாலே கொண்டாட்டம் தான். இது பலருக்கு திண்டாட்டமாக போகலாம்.
புதுச்சேரி விளையாட்டு, அரசியல், சமூகம், மக்கள் சேவையில் தனித்துவத்துடன் சிறந்து விளங்க எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். மொழி, கலாச்சாரம், எல்லைகள், தொல்லைகள் வேறாக இருக்கலாம். ஆனால் தேசம் என வரும்போது ஒன்றுபட்ட உணர்வுடன் செயல்படுவோம் என்றார்.
முதல்வர் ரங்கசாமி பேசுகையில், பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு பெரியோர்களிடம் ஆலோசித்து ஆராய்ந்து நவம்பர் 1-ம் தேதியை நாம் புதுச்சேரியின் விடுதலை நாளாக கொண்டாடி கொண்டிருக்கின்றோம். புதுச்சேரி சிறிய மாநிலம்.
முன்பு 3 லட்சம் மக்கள் தொகை இருந்தது. தற்போது 15 லட்சம் மக்கள் தொகையாக உயர்ந்திருக்கிறது. அப்போது ரூ.45 ஆயிரம் தனிநபர் வருமானம் இருந்தது. இப்போது ரூ.2.24 லட்சமாக உயர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவிக்கிறேன். அனைத்து துறைகளிலும் புதுச்சேரி வளர்ச்சியடைந்துள்ளது. மக்களுக்கான நலத்திட்டங்களை செய்து கொடுப்பதில் பிற மாநிலங்களை காட்டிலும் நாம் உயர்ந்த நிலையில் இருக்கின்றோம்.
மத்திய அரசும் புதுச்சேரி வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கி கொடுக்கிறது. பிரதமர் சொன்னது போன்று பெஸ்ட் புதுச்சேரியை உருவாக்கும் வகையில் தேவையான உதவிகளை செய்கிறது. மத்திய அரசு கொடுக்கும் நிதியை சரியாக பயன்படுத்தி நல்ல வளர்ச்சியை நாம் கொண்டு வந்திருக்கின்றோம்.
விடுதலைக்கு பிறகு புதுச்சேரியின் வளர்ச்சி மத்திய அரசின் உதவியோடு எந்தளவுக்கு உயர்ந்திருக்கிறது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். இதற்காக மத்திய அரசுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் சாய் ஜெ.சரவணன்குமார், செல்வகணபதி எம்பி, பேரவை துணைத் தலைவர் ராஜவேலு, எம்எல்ஏக்கள் ஏகேடி.ஆறுமுகம், ஜான்குமார் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.