தங்களை அழகுபடுத்திக் கொள்ளும் எண்ணம் பெண்களிடையே பரவலாக இருக்கும். அதற்காக அழகு நிலையங்களுக்குச் சென்று ஒப்பனை செய்துகொள்வது வழக்கம். இந்த நிலையில் கான்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது புருவத்தைத் திருத்தம் செய்ததற்கு அவரின் கணவர் தலாக் கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

குல்சைபா என்ற பெண், சலீம் என்பவரை 2022-ல் மணந்துள்ளார். வேலை காரணமாக 2023 ஆகஸ்ட் 30-ம் தேதி சலீம், சவுதி அரேபியாவுக்குச் சென்று விட, குல்பைசா கான்பூரிலேயே இருந்திருக்கிறார்.
அக்டோபர் 4 அன்று தனது மனைவியோடு பேசுவதற்கு வீடியோ காலில் வந்த சலீம், மனைவியின் புருவத்தைக் கண்டதும் கோபமடைந்து இருக்கிறார். `நீ ஏன் புருவத்தைத் திருத்தம் செய்தாய்’ எனக் கேட்டிருக்கிறார். `புருவத்தில் அதிகமாக முடி இருந்து அழகாக இல்லாமல் இருந்ததால் ட்ரிம் செய்தேன்’ என அந்தப் பெண் கூறியுள்ளார்.
எந்த சமரசங்களுக்கும் இணங்காத சலீம், `என் விருப்பத்தைக் கேட்காமல் இதைச் செய்திருக்கிறாய். இன்று முதல் உன்னை திருமண பந்தத்தில் இருந்து விடுவிக்கிறேன்’ என்று கூறி வீடியோ அழைப்பில் மூன்று முறை தலாக் கூறி இணைப்பைத் துண்டித்துள்ளார்.

அதன்பிறகு எத்தனை முறை தொடர்பு கொண்டாலும் சலீம் போனை எடுக்கவில்லை. இதனால் மனமுடைந்தவர், காவல் நிலையத்தில் தன் கணவர் மற்றும் மாமியார் என ஐந்து நபர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருக்கிறார்.
காவல்துறையினரிடம் தன் கணவர் சவுதி சென்ற பின்னர் வரதட்சணை கேட்டு தன்னை அவ்வீட்டினர் துன்புறுத்தியதாக அந்தப் பெண் கூறியுள்ளார். அதோடு ஓல்டு பேஷனாக அவரது கணவர் இருப்பதாகவும் புகார் அளித்துள்ளார்.